பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அரசு பேருந்துகள் ஓடவில்லை.

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் சுமார் 40 ஊழியர்கள் மட்டுமே நிரந்தர பணியாளார்களாக உள்ளனர். ஓட்டுநர், நடத்துநர், பணிமனை ஊழியர்கள் என 130-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். இவர்கள் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகின்றனர். அவ்வப்போது பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு சார்பில் உறுதிமொழி அளித்தப்பிறகு போராட்டம் கைவிடப்படும்.

இந்த நிலையில் சாலைபோக்குவரத்து கழக ஒருங்கினைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழு சார்பில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், அனைத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு சம்பளத்தை வழங்க கோரியும் போக்குவரத்து பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த நோட்டீஸ் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் வேலை நிறுத்தபோராட்டத்தை அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். இதனால் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. நகரம், கிராமபுற பகுதிகளில் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

The post பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: