இந்த நிலையில் சிரபுஞ்சிக்கு சுற்றுலா சென்று இருந்த தேவ் சிங் என்ற பயணி தனது இன்ஸ்டாகிராமில் சோனம், அவரது கணவர் ராஜா ரகுவன்ஷி மலையேறி சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். ராஜா கொலையாவதற்கு சற்று முன்பு இந்த வீடியோவை அவர் எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில்,’ எனது சுற்றுலா வீடியோக்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்த போது அதில் இந்தூர் ஹனிமூன் தம்பதியினரின் பதிவு எனக்குக் கிடைத்தது. நாங்கள் கீழே சென்று கொண்டிருந்தபோது காலை 9:45 மணியளவில், அந்த ஜோடி மேலே சென்று கொண்டிருந்தது.
இது அந்த ஜோடியின் கடைசி பதிவு என்று நான் நினைக்கிறேன். மேலும் சோனம் கொலை நடந்த தினத்தில் பயன்படுத்திய அதே வெள்ளை டி-சர்ட்டை அணிந்திருந்தார். இது மேகாலயா போலீசாருக்கு உதவும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோவில் சோனம் முதலில் நடந்து செல்ல, அவருக்கு பின்னால் ராஜா ரகுவன்ஷி சென்று கொண்டு இருந்தார். அன்று மதியம் தான் ராஜா படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் அவரது கடைசி வீடியோவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* சோனம் குடும்பத்தினருக்கு நார்கோ சோதனை வேண்டும்
சோனம் குடும்பத்திற்கு நார்கோ சோதனை நடத்த வேண்டும் என்று ராஜாவின் மூத்த சகோதரர் விபின் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று ராஜாவின் 13வது நாள் காரியம் நடந்தது. இதில் சோனம் சகோதரர் கோவிந்த் கலந்து கொண்டார். அவரை அழைக்காமல் வந்து கலந்து கொண்டதால் ராஜாவின் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர். ராஜாவின் மூத்த சகோதரர் விபின் ரகுவன்ஷி கூறுகையில், சோனம், அவரது பெற்றோர், சகோதரர் கோவிந்த் மற்றும் மைத்துனி ஆகியோருக்கு உண்மை கண்டறியும் நார்கோ சோதனை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றார். சோனம் சகோதரர் கோவிந்த் கூறுகையில்,’ நான் மன்னிப்பு கேட்க இங்கே வந்து இருக்கிறேன். யாராவது எங்களை சந்தேகித்தால், எங்கள் குடும்பத்தையும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ராஜா ரகுவன்ஷியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம்’ என்றார். இருப்பினும் சோனம், ராஜா குடும்பத்தினர் இடையே தற்போது பதற்றம் அதிகரித்து உள்ளது.
* இவ்வளவு வெறி ஏன்?
இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலையில் மனைவி சோனத்திற்கு இவ்வளவு வெறி எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருவதாகவும் மேகாலயா டிஜிபி இடஷிஷா நோங்ராங் நேற்று தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ இந்த வழக்கில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று நாங்கள் விசாரித்து வருகிறோம். திருமணமான சில நாட்களுக்குள், அவர் (சோனம்) தனது கணவர் மீது இவ்வளவு விரோதத்தை வளர்த்துக் கொள்வது அசாதாரணமானது. இந்தக் கொலை நடந்ததற்கான அனைத்து சாத்தியமான கோணங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. காணாமல் போன ராஜாவின் நகைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சோனம் தெரிவித்துள்ளார். நாங்கள் அதைப் பற்றி விசாரிப்போம். கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று மதியம் 12 மணியளவில் குற்றம் நடந்த இடத்தை மீண்டும் அடையாளம் காட்டுவதற்காக சோஹ்ராவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.
The post ஹனிமூன் கொலைக்கு சற்று முன்பு: புதுமாப்பிள்ளையின் கடைசி வீடியோ வெளியானது; வெள்ளை நிற டிசர்ட்டுடன் சிக்கினார் சோனம் appeared first on Dinakaran.