டிரம்பின் மிரட்டலை தொடர்ந்து கம்போடியா-தாய்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தம்: மலேசியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு


சுரின்: தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே கடந்த 24ம் தேதி எல்லையில் மோதல் ஏற்பட்டது. அண்டை நாடுகளான இவ்விரு நாடுகளின் எல்லையில் உள்ள இந்து கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பதால் கடந்த 100 ஆண்டுகளாக சண்டை நீடித்து வருகிறது. 5வது நாளாக நேற்றும் இரு நாடுகள் இடையே எல்லையில் துப்பாக்கி சண்டை நீடித்தது. இதுவரை 5 நாள் சண்டையில் 32 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். எல்லையில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த 1.5 லட்சம் மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உடனடி போர் நிறுத்தம் தொடர்பாக கம்போடியா-தாய்லாந்து இடையே முதல்முறையாக மலேசியாவில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில், கம்போடியா பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாசை பங்கேற்றனர். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் ஏற்பாட்டின் கீழ், அவரது வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. மலேசியா, சீனா ஆகிய நாடுகள் போரை கைவிட இருதரப்பை வலியுறுத்திய நிலையில், போர் நீடித்தால் தாய்லாந்து, கம்போடியாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் செய்யாது என அதிபர் டிரம்ப் மிரட்டியிருந்தார்.

டிரம்பின் இந்த மிரட்டலை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் தாய்லாந்து, கம்போடியா தலைவர்கள் உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு சம்மதித்ததாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்தார். எல்லையில் நடக்கும் அறிவிக்கப்படாத போரால் பொதுமக்கள் பலியாவதை இரு நாடுகளின் தலைவர்களும் விரும்பவில்லை என பேச்சுவார்த்தையில் தெரிவித்தனர். இதனால், 5 நாளாக நடந்த போர் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளதால், எல்லையில் பதற்றம் தணிந்துள்ளது.

The post டிரம்பின் மிரட்டலை தொடர்ந்து கம்போடியா-தாய்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தம்: மலேசியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு appeared first on Dinakaran.

Related Stories: