இரவிலும் பகலிலும் மாறி மாறி ஏவுகணை வீசி தாக்குதல் ஈரான்-இஸ்ரேல் 4வது நாளாக மோதல்: யுத்தம் முடிவுக்கு வர எந்த அறிகுறியும் இல்லை

டெல் அவிவ்: ஈரான்-இஸ்ரேல் இடையேயான மோதல் 4வது நாளாக நேற்றும் நீடித்தது. இரவிலும் பகலிலும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், டிரோன்களை ஏவி இரு நாட்டு ராணுவமும் நடத்திய தாக்குதலில் பல அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இந்த யுத்தம் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தற்போதைய சூழலில் இல்லை. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தலைமை கமாண்டர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக ஈரானும் நூற்றுக்கணக்கான சக்தி வாய்ந்த ஏவுகணைகள், டிரோன்களை ஏவி இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. நேற்று முன்தினம் ஈரானின் எண்ணெய் கிணறுகள், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், 4வது நாளாக நேற்றும் மோதல் தொடர்ந்தது. ஈரானும், இஸ்ரேலும் மாறி மாறி நூற்றுக்கணக்கான ஏவுகணை, ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தின. இதில், மேற்கு ஈரான் முதல் தலைநகர் தெஹ்ரான் வரையிலும் ஈரானின் 120க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானின் 30 சதவீத வான் பாதுகாப்பு அமைப்புகள் தகர்க்கப்பட்டதால் தங்களால் தெஹ்ரானின் ஆழமான பகுதி வரையிலும் எளிதாக சென்று தாக்குதல் நடத்த முடியும் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் டெப்ரின் கூறி உள்ளார். அணு சக்தி மையங்கள், எண்ணெய் கிணறுகளுக்கு பிறகு ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானில் இதுவரை 220 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதில் 75 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஈரானிய மனித உரிமை அமைப்பு 400க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் அதில் 197 பேர் பொதுமக்கள் என்றும் கூறி உள்ளது. 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ராணுவம் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை நோக்கி சரமாரியாக ஏவுகணைகளை ஏவியது. கடந்த 4 நாள் தாக்குதலில் 370க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவியதாகவும் அதில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிடம் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்த போதிலும், ஈரானின் ஏவுகணைகள் நேற்று அதிகாலையில் டெல் அவிவ் நகரை தாக்கி உலுக்கின. மத்திய இஸ்ரேலிய நகரமான பெட்டா டிக்வாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் முற்றிலும் நாசமானது. பல குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன. நேற்று மட்டும் 4 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பெட்டா டிக்வாவில் 5 பேரும், ஹைபாவில் 3 பேரும் பலியாகினர். 287 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தினால் பதிலடியை நிறுத்த தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று முன்தினம் கூறியிருந்தார். ஆனால் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தும்படியாக இல்லை. இதுனால் இந்த யுத்தம் தற்போதைக்கு முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நீடிக்கிறது.

* அமெரிக்க துணை தூதரகம் மீதும் தாக்குதல்
ஈரான் ஏவிய ஏவுகணை ஒன்று, இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே விழுந்து வெடித்து சிதறியது. இதனால் அமெரிக்க துணை தூதரக கட்டிடம் சிறிது சேதமடைந்ததாக அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தனது எக்ஸ் பதிவல் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில், அமெரிக்க தூதகர ஊழியர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

* டிரம்ப்பை கொல்ல ஈரான் முயற்சி
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று முன்தினம் அளித்த தொலைக்காட்சி பேட்டியில், ‘‘ஈரான் அணு ஆயுதம் கொண்டிருப்பதை எதிர்ப்பதால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை 2 முறை கொல்ல ஈரான் முயற்சி செய்தது. ஈரான் தனது முதல் எதிரியாக டிரம்ப்பை கருதுகிறது. எனவே அவரை படுகொலை செய்வதற்கு தொடர்ந்து முயற்சிக்கிறது என உளவு தகவல்கள் கிடைத்துள்ளன’’ என்றார்.

* புடின் மத்தியஸ்தம் செய்ய எதிர்ப்பு
ஈரான், இஸ்ரேல் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்த விவகாரத்தில் இருதரப்பிலும் மோதல் நிறுத்தப்பட்டு, அணு ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென துருக்கி, ரஷ்யா அதிபர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த விஷயத்தில் ரஷ்ய அதிபர் புடின் மத்தியஸ்தம் செய்ய சரியான நபர் என்றும் அதற்கு அவர் தயாராக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புடினை நம்ப முடியாத நபர் என்றும், ரஷ்யா ஒருபோதும் நடுவராக இருக்க முடியாது என்றும் கூறி உள்ளது.

* தெஹ்ரான் மக்கள் வெளியேற எச்சரிக்கை
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மாவட்டம்-3 எனும் பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் நேற்று எச்சரிக்கை வெளியிட்டது. அடுத்த சில மணி நேரத்தில் அப்பகுதியில் தாக்குதல் நடத்த இருப்பதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியது. ஈரானுக்கு வெளியே ராணுவ மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புரட்சிகர காவல்படையின் முக்கிய பிரிவான குட்ஸ் படைக்கு சொந்தமான தெஹ்ரானில் உள்ள 10 கட்டளை மையங்களை இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தகர்த்தது குறிப்பிடத்தக்கது.

* பாதுகாப்பான இடங்களுக்கு இந்திய மாணவர்கள் மாற்றம்
ஈரான், இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் ஈரானில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க வேண்டுமென அவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து ஈரானின் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘இங்குள்ள பாதுகாப்பு நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஈரானில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து வருகிறோம். சில இடங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தூதரகத்துடன் தொடர்புடைய பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை மாற்றி உள்ளோம். மாணவர்கள் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம்’ என கூறப்பட்டுள்ளது. இதே போல, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஈரானில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்களை பத்திரமாக அனுப்பி வைப்பதில் உதவ தயாராக இருப்பதாக அஜர்பைஜான் தெரிவித்துள்ளது.

ஈரான் உச்சதலைவரை கொல்ல இஸ்ரேல் திட்டமா?
ஈரான் உச்ச தலைவர் காமெனியை கொல்ல நம்பகமான திட்டத்தை இஸ்ரேல் சமீபத்தில் உருவாக்கியதாகவும், இதைப் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தெரிவித்த போது அவர், அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தது பரபரப்பானது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஒருபோதும் நடக்காத உரையாடல்கள் பற்றிய பல தவறான தகவல்கள் வெளியாகின்றன. நான் அதில் தலையிடப் போவதில்லை. நான் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். எங்களால் என்ன முடியுமோ அதை நாங்கள் செய்வோம். அமெரிக்காவிற்கு எது நல்லதோ அதை அமெரிக்கா செய்யும். அதில் நான் தலையிட மாட்டேன்’’ என்றார். இதே போல, இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘‘ஈரானின் அரசியல் தலைவர்களை கொல்வது இஸ்ரேலின் கொள்கை அல்ல. நாங்கள் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப்பில் கவனம் செலுத்துகிறோம். ஆனாலும், ஈரான் உச்ச தலைவர் இரவில் படுக்கையறைகளை தொடர்ந்து மாற்றுவது நல்லது’’ என்றார்.

நேரடி ஒளிபரப்பின் போது ஈரான் அரசு டிவி சேனல் மீது குண்டுவீச்சு
தெஹ்ரானில் நேற்று மாலை தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஈரான் அரசு டிவி சேனல் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. அந்த சமயத்தில் இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக பெண் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். நேரடி ஒளிபரப்பு நடந்த அந்த சமயத்தில் கட்டிடம் தகர்க்கப்பட்டதால் பீதியுடன் அந்த பெண் ஊடகவியலாளர் ஓடும் காட்சிகள் நேரடியாக காட்டப்பட்டன.

The post இரவிலும் பகலிலும் மாறி மாறி ஏவுகணை வீசி தாக்குதல் ஈரான்-இஸ்ரேல் 4வது நாளாக மோதல்: யுத்தம் முடிவுக்கு வர எந்த அறிகுறியும் இல்லை appeared first on Dinakaran.

Related Stories: