நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; பவானிசாகர் அணை நீர்மட்டம் 84 அடியாக உயர்வு

சத்தியமங்கலம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 8438 கன அடியாக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3927 கனஅடியாக இருந்த நிலையில், நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக இன்று காலை 8438 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 84.31 அடியாகவும், நீர்இருப்பு 18.0 டிஎம்சி ஆகவும் உள்ளது.

தற்போது அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 850 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீர் என மொத்தம் 855 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை; பவானிசாகர் அணை நீர்மட்டம் 84 அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: