72 பதவிக்கு குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு; தமிழகம் முழுவதும் 1.86 லட்சம் ேபர் எழுதினர்: 2 மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்படும்

சென்னை: குரூப் 1, குரூப் 1ஏ பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 72 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. 72 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 1.86 லட்சம் பேர் எழுதினர். 2 மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. இதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும்.

அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. தொடர்ந்து ஏப்ரல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி குரூப் 1, குரூப் 1ஏ தேர்வு நேற்று நடந்தது. குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் குரூப் 1 பதவிக்கு 2,27,982 பேரும், குரூப் 1ஏ தேர்வுக்கு 6465 பேரும், குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு சேர்த்து 14849 பேரும் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகா மையங்கள் என 44 இடங்களில் தேர்வுகள் நடந்தது. தேர்வை கண்காணிக்க 987 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ராயப்பேட்டை, தி.நகர், கே.கே.நகர், அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 41,094 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். குரூப் 1, குரூப் 1 ஏ முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கிது. பிற்பகல் 12.30 மணி வரை இந்த தேர்வு நடந்தது.

எழுத்து தேர்வில் பொது அறிவில் 175 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு தான் தேர்வு என்றாலும் காலை 7 மணி முதலே தேர்வு எழுதுபவர்கள் ஆர்வமுடன் தேர்வு கூடத்திற்கு வர தொடங்கினர்.

அவர்கள் அங்கு இறுதிகட்ட படிப்பில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். குரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை ஆய்வு செய்த பின்னர் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் அளித்த பேட்டியில், ‘குரூப் 1 தேர்வுக்கான ரிசல்ட் 2 மாதத்தில் வெளியிடப்படும். மெயின் தேர்வு அதில் இருந்து 3 மாதத்திற்குள் நடைபெறும்’ என்றார்.

63,166 ஆயிரம் பேர் ஆப்ெசன்ட்
குரூப் 1 முதல்நிலை தேர்வு எழுத 2 லட்சத்து 49,294 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 74.66 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது, 1 லட்சத்து 86,128 பேர் மட்டுமே தேர்வு எழுது வந்துள்ளனர். 25.34 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அதாவது 63 ஆயிரத்து 166 பேர்தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 72 பதவிக்கு குரூப் 1, குரூப் 1ஏ முதல்நிலை தேர்வு; தமிழகம் முழுவதும் 1.86 லட்சம் ேபர் எழுதினர்: 2 மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்படும் appeared first on Dinakaran.

Related Stories: