பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சத்தியமூர்த்திபவனில் நிருபர்களிடம் கூறியதாவது:  மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 20ம்தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் முதல் முறையாக விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்திய நாட்டின் தலைவர்கள் பெயரில் வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்க முடிவெடுத்துள்ளோம். ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்துடன் சான்றிதழும் வழங்கப்படும்.

இதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான இந்த குழுவில் வேளாண் விஞ்ஞானி சாமிநாதனின் மகள் சவுமியா சாமிநாதனுடன் நானும் இடம் பெற்றுள்ளேன். காந்தி, நேரு, காமராஜர், அம்பேத்கார், அப்துல் கலாம், இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகிய 7 பேரின் பெயரில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அழைக்க உள்ளோம். தமிழ்நாட்டு நலனை புறக்கணித்து வரும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். அவர் எந்தெந்த மாவட்டங்களுக்கு செல்கிறாரோ அங்கெல்லாம் கருப்புக்கொடி காட்டப்படும் என்றார். முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர் உடன் இருந்தனர்.

The post பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: