பெரம்பூர், ஜூன் 16: வியாசர்பாடியில் காரில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர். வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஏ.ஏ.சாலை பகுதியில் நேற்று மதியம் 2 மணியளவில் சாலையோரம் நின்றிருந்த ஆம்னி காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வியாசர்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆம்னி காரை திறந்து பார்த்தனர். அப்போது, சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.
இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், வியாசர்பாடி பி.பி சாலை பகுதியைச் சேர்ந்த பழைய கார்களை சரி செய்யும் கடை நடத்தி வரும் ரபேல்(55) என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், பல ஆண்டுகளாக அந்த கார் அங்கு நின்றிருப்பதும் தெரியவந்தது. மேலும், இறந்தவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து பிழைத்து வந்த அதேபகுதியைச் சேர்ந்த சண்முகம்(50) என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடிபோதையில் காரில் படுத்து தூங்கியபோது இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.