அண்ணாநகர், ஜூன் 16: அண்ணாநகர், கோயம்பேட்டில் மீண்டும் பைக் ரேஸ் சம்பவம் நடந்த நிலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறி 20 வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணாநகர், கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் இரவு நேரங்களில் பைக் ரேஸ் நடத்தி அவற்றை இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்தனர்.
இதையடுத்து அண்ணாநகர் போக்குவரத்து துணை ஆணையர் ஜெயகரன் உத்தரவின்படி, அண்ணாநகர், கோயம்பேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் நரேஷ்குமார், சுந்தரம் ஆகியோர் தலைமையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதால் இரவு நேர பைக் ரேஸ் சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. சமீப காலமாக அண்ணாநகர், கோயம்பேடு பகுதிகளில் மீண்டும் இரவு நேர பைக் ரேஸ் சம்பவங்கள் நடந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நம்பர் பிளேட் இல்லாமல் பைக் ஓட்டி வந்தவர்கள் மற்றும் ஒரே வாகனத்தில் பயணித்த 3 பேர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை தாறுமாறாக ஒட்டி சென்றவர்களை உள்பட சுமார் 20 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல், கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தை இரும்பு தடுப்புகள் வைத்து மூடினர். மேலும், வாகன சோதனையை தீவிரமாக மேற்கொண்டனர்.
The post அண்ணாநகர், கோயம்பேட்டில் மீண்டும் பைக் ரேஸ் 20 வாகனங்கள் அதிரடி பறிமுதல்: போலீசார் சோதனையில் நடவடிக்கை appeared first on Dinakaran.