நான் நியமித்தது நியமித்தது தான் அன்புமணியை பற்றி கவலை வேண்டாம் தைரியமாக கட்சி வேலையை செய்யுங்கள்: புதிய நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவு

திண்டிவனம்: நான் நியமித்தது நியமித்தது தான். அன்புமணியை பற்றி கவலைப்படாதீர்கள். தைரியமாக கட்சி வேலையை செய்யுங்கள் என புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு ராமதாஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாமகவில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒரு முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே செல்கிறது. செயல்தலைவர் பதவியை அன்புமணி ஏற்க மறுத்து பிடிவாதமாக இருப்பதால் என் மூச்சு இருக்கும் வரை நானே தலைவராக இருப்பேன் என அறிவித்து ராமதாஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

அதற்கேற்றார்போல் கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் சுறுசுறுப்பாக இறங்கி உள்ளார். அன்புமணி ஆதரவாளர்களை தொடர்ந்து ஓரம் கட்டி வரும் ராமதாஸ், பொதுச்செயலாளர், பொருளாளர் என முக்கிய நிர்வாகிகளையும் நீக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார். அனைத்து மாவட்டங்களுக்கும் தினம்தோறும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதுவரை 57 மாவட்ட செயலாளர்களையும், 35 மாவட்ட தலைவர்களையும் அவர் நியமித்துள்ளார்.

ராமதாஸ் ஒரு பக்கம் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வரும் அதே வேளையில் கட்சியை தன் கைப்பிடிக்குள் கொண்டு வர அன்புமணியும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கட்சியில் தன் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள அடிமட்ட தொண்டர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள அவர் 100 நாள் நடைபணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் மாவட்ட பொதுக்குழு கூட்டப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று காலை திருவள்ளூர் மாவட்டத்திலும் மாலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் பொதுக்குழு கூட்டம் நடத்தி கட்சிக்காரர்களை தேர்தல் பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் தான் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் வட மாவட்ட மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த புதிதாக நியமிக்கப்பட்ட பாமக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. 44 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 42 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

35 மாவட்டத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் 32 மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பாமக மாஜி தலைவர் தீரன், சமூகநீதி பேரவை தலைவர் கோபு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஒரு சில புதிய நிர்வாகிகள், ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பதவி அப்படியே இருக்கும்போது எங்களை அவர்கள் செயல்பட அனுமதிப்பார்களா? ஒரே பதவியில் இரண்டு நிர்வாகிகள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தாதா? இப்போது நியமிக்கப்பட்ட இந்த பதவி எங்களுக்கு நீடிக்குமா? என சந்தேகங்களை எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய ராமதாஸ், ‘நான் நியமித்தது நியமித்தது தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. நிறுவனரும் நான் தான், தலைவரும் நான் தான்.

இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் தேவையில்லை. அன்புமணி குறித்தோ அவர் நியமித்து வரும் நிர்வாகிகள் குறித்தோ நீங்கள் அச்சப்பட தேவையில்லை. நீங்கள் தைரியமாக கட்சி பணியை செவ்வனே செய்யுங்கள். உங்களோடு நான் இருக்கிறேன். 10.5% இடஒதுக்கீடு பெறுவது குறித்து நாம் தொடர்ந்து போராட வேண்டும், பூம்புகார் மகளிர் மாநாட்டு பணிகளை சுணக்கமின்றி மேற்கொள்ளுங்கள், மக்களிடம் பாமகவின் சாதனைகளை கொண்டு சேருங்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் பாமக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று எந்த கூட்டணியுடன் பாமக இடம்பெறுகிறதோ அந்த கட்சி வெற்றி பெற பாடுபடுங்கள். யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். சிலர் ஆதாயத்தை தேடி சென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன்’ என்று நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

* அன்புமணி ஆதரவாளர்களும் பங்கேற்பு
வன்னியர் சங்க மாநில செயலாளர் அரியலூர் வைத்தி மற்றும் முன்னாள் எம்எல்ஏ இளவழகன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணகுமார் ஆகியோர் இதுவரை அன்புமணி ஆதரவாளர்களாக இருந்து வந்தார்கள். அவர்கள் திடீரென முகாம் மாறி நேற்று தைலாபுரம் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

* தென் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை
இன்று தென் மாவட்டங்களை சேர்ந்த புதிய நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டுவது சம்பந்தமாக ராமதாஸ் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் அன்புமணி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்வது போல் ராமதாசும் தமிழகம் முழவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

* நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியாணி
ஞாயிற்று கிழமை கூட்டம் நடந்ததால் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் மட்டன் பிரியாணியுடன் அசைவ உணவு பரிமாறப்பட்டது.

* நிறுவனரும் நான் தான், தலைவரும் நான் தான். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் தேவையில்லை.

* ராமதாசுடன் வியனரசு திடீர் சந்திப்பு
வன்னியர் சங்கத்திலிருந்து ராமதாஸ் பாமகவை துவக்கியபோது இடதுசாரி சிந்தனையாளர்கள், தலித் செயல்பாட்டாளர்கள் பலர் அவருடன் இணைந்து செயல்பட்டனர். முருகவேல் ராஜன், வியனரசு போன்றவர்களை கட்சியில் சேர்த்து பாமகவை அனைத்து பிரிவினருக்குமான கட்சியாக ராமதாஸ் முன்னிறுத்தினார். வடமாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலும் அதிக தொகுதிகளில் போட்டியிட்டார். அதன் பிறகு சாதி அரசியல், தலித் அல்லாதவர் கூட்டமைப்பு, பாஜவுடன் கூட்டணி போன்ற நடவடிக்கைகளால் இடதுசாரி சிந்தனையாளர்கள் ராமதாசுடன் இருந்த தொடர்பை படிப்படியாக துண்டித்துக்கொண்டனர்.

தற்போது மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராமதாஸ் தனியாக செயல்பட்டு வரும் சூழ்நிலையில் ஆரம்பகால கட்சிக்காரர்கள் பலர் ராமதாசை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏவின் சகோதரர் திருமால்வளவன் ராமதாசை சந்தித்து பேசினார். அதேபோல் கட்சி ஆரம்பித்த காலத்தில் ராமதாசுடன் பயணித்த திருப்பூரை சேர்ந்த சையது மன்சூர் உசேனை தற்போது கட்சியின் பொருளாளராக்கி உள்ளார். இந்நிலையில் தமிழ் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் வியனரசு நேற்று ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

வியனரசு, பாமகவில் மாநிலக் கொள்கை பரப்பு அணித் தலைவராகவும் பாமக. அரசியல் பயிலரங்க பேராசிரியராகவும் 2007 முதல் 2014 வரை தைலாபுரம் தோட்டத்திலே தங்கி தீவிரமாக கட்சி பணியாற்றியவர். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜவோடு பாமக கூட்டணி சேர்ந்ததில் முரண்பட்டு அதிலிருந்து விலகி சீமான் அழைப்பை ஏற்று நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தார். தற்போது சீமானுடன் கருத்து வேறுபாட்டால் அந்த கட்சியிலிருந்தும் விலகிவிட்டார். இவர் தற்போது ராமதாசை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 2001ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வடிவேல் ராவணனை தைலாபுரம் அழைத்து வந்து மீண்டும் கட்சியில் சேர்த்தவரும் வியனரசுதான்.

The post நான் நியமித்தது நியமித்தது தான் அன்புமணியை பற்றி கவலை வேண்டாம் தைரியமாக கட்சி வேலையை செய்யுங்கள்: புதிய நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: