இதனால், அங்கு பெரும் போராட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேசிய காவல் படை மற்றும் கடற்படை வீரர்களை அதிபர் டிரம்ப் அனுப்பி வைத்தார். மாகாண ஆளுநர், நகர மேயர் உள்ளிட்ட உள்ளூர் நிர்வாகத்தின் கோரிக்கை இல்லாமல் அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக பாதுகாப்பு படை வீரர்களை லாஸ் ஏஞ்சல்சுக்கு அனுப்பியது அமெரிக்கா முழுவதும் டிரம்புக்கு எதிராக கடும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் 250வது ஆண்டு நிறைவையொட்டி தலைநகர் வாஷிங்டனில் நேற்று பிரமாண்ட ராணுவ அணிவகுப்புக்கு டிரம்ப் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. டிரம்பின் 79வது பிறந்தநாளில் நடக்கும் இந்த ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனால், இதே நாளில் டிரம்புக்கு எதிராக 50501 இயக்கத்தினர் அமெரிக்கா முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணத்திலும் 50 போராட்டங்கள் ஒரே நோக்கத்திற்காக நடத்துவதை குறிக்கும் வகையில் இந்த இயக்கம் உருவானது. பல்வேறு குழுக்கள் இணைந்து உருவாக்கிய இந்த இயக்கம் ‘நோ கிங்ஸ்’ என்ற மைய கருத்தை வலியுறுத்தி டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றம் உள்ளிட்ட கொள்கைகளை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இயக்கம் சார்பில் அமெரிக்கா முழுவதும் நேற்று ‘நோ கிங்ஸ்’ போராட்டம் நடத்தப்பட்டது.
தெருக்கள், பூங்காக்கள், பொது இடங்களில் போராட்டக்காரர்கள் கூடி டிரம்புக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். நியூயார்க், டென்வர், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ, ஆஸ்டின், லாஸ்ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் பிரமாண்ட பேரணிகளும் நடந்தன. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அணிவகுத்து , டிரம்ஸ் அடித்து டிரம்புக்கு எதிராக கோஷமிட்டனர். சியாட்டிலில் 70 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணியில், ஜனநாயகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகளைப் பாதுகாக்க கோரிக்கை விடுத்து, சர்வாதிகார எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். போராட்ட களத்தின் பல இடங்களிலும் அமெரிக்க கொடிகள் விநியோகிக்கப்பட்டன.
சில இடங்களில் துக்கத்தை தெரிவிக்கும் வகையில் தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிடப்பட்டது. ‘மன்னர் மனப்பான்மை கூடாது’, ‘மினி முசோலினியை நாடு கடத்துங்கள்’, ‘அதிபர் டிரம்ப் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என பல பதாகைகள் ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை அமைதியாக நடத்த வேண்டுமெனவும், வன்முறையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் ஏற்கனவே நகர மேயர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நடந்தன.
நாடு முழுவதும் இப்போராட்டம் தீவிரமடைய காரணமான லாஸ் ஏஞ்சல்சில் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் போலீசார் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால், போராட்ட களத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நியூயார்க் உள்ளிட்ட பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதாக போராட்டக்காரர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டங்களுக்கு மத்தியில் வாஷிங்டனில் நடந்த ராணுவ அணிவகுப்பில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
* கேலி பலூன்கள் கலக்கல்
போராட்டத்தில் பல இடங்களிலும் அதிபர் டிரம்பை கேலி செய்யும் வகையிலான அவரது உருவ பொம்மைகளை போராட்டக்காரர்கள் கொண்டு வந்தனர். வடமேற்கு வாஷிங்டனின் லோகன் வட்டத்தில் நடந்த போராட்டத்தில் டிரம்ப் உருவ பொம்மை கிரீடம் அணிந்தபடி தங்க கழிப்பறையில் அமர்ந்திருப்பது போல கொண்டு வரப்பட்டது.
* துப்பாக்கி சூட்டால் பதற்றம்
உட்டா மாகாணத்தின் சால்ட் லேக் நகரில், நகர மையத்தில் நடந்த பேரணியின் போது துப்பாக்கி சூடு நடந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
The post அமெரிக்கா முழுவதும் நடந்தது அதிபர் டிரம்புக்கு எதிராக மாபெரும் போராட்டம்: தெருக்கள், பூங்காக்கள், பொது இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடி கோஷமிட்டனர் appeared first on Dinakaran.