3 நாடுகள் சுற்றுப்பயணம் சைப்ரஸ் நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

நிக்கோசியா: பிரதமர் மோடி தனது 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக சைப்ரஸ் நாட்டிற்கு நேற்று சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கனடாவின் கனனாஸ்கிசில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு நேற்று தொடங்கி நாளை வரை நடக்க உள்ளது. அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அழைப்பின் பேரில் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதையொட்டி, சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டார். தனது பயணத்தின் முதல்கட்டமாக மோடி சைப்ரஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு லார்னகா சர்வதேச விமான நிலையத்தில் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடி இன்று அதிபர் நிகோஸ் மற்றும் வர்த்தக தொழில்துறையினர்களை சந்தித்து பேச உள்ளார்.

சைப்ரசில் 2 நாள் பயணத்தை இன்று நிறைவு செய்யும் பிரதமர் மோடி, அடுத்ததாக கனடா சென்று ஜி7 மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அங்கிருந்து 18ம் தேதி குரோஷியா நாட்டிற்கு செல்கிறார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க இந்திய எம்பிக்கள் குழுவினர் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்தனர். அதன்பின் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது.

The post 3 நாடுகள் சுற்றுப்பயணம் சைப்ரஸ் நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: