எழும்பூரில் சீரமைப்பு பணி நடப்பதால் தேஜஸ், செந்தூர், குருவாயூர் உள்பட 5 ரயில்கள் 20ம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடப்பதால் தேஜஸ், மன்னை, செந்தூர், குருவாயூர் விரைவு ரயில்கள் உள்பட 5 ரயில்கள் வரும் 20ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இதனால், எழும்பூர் – புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வந்தடையும் என்றும், புதுடெல்லி – எழும்பூர் இடையே இயக்கப்பட்ட கிராண்ட் டிரங்க் ரயில் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில் உள்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளன.

இவற்றில் 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் (22671-22672) ஜூன் 20 முதல் ஆக.18ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும். அதேபோல், இரவு 9.25 மணிக்கு வந்தடையும். எழும்பூர் – மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் (16179-16180) ஜூன் 20 முதல் ஆக.18ம் தேதி வரை தாம்பரத்தில் இரவு 11.22 மணிக்கு புறப்படும். மன்னார்குடியில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும்.

எழும்பூர் – திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயில் (20605-20606) ஜூன் 20 முதல் ஆக.18ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும். காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16127-16128) ஜூன் 20 முதல் ஆக.19ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்படும். இதுபோல, குருவாயூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16101-16102), ஜூன் 20 முதல் ஆக.18ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கு புறப்படும். தாம்பரத்துக்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்தடையும். தாம்பரம் – ஐதராபாத் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (12759, 12760), ஜூன் 20 முதல் ஆக.18ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.

மதுரை – ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் வாராந்திர விரைவு ரயில் (22631) ஜூன் 26 முதல் ஆக.14ம் தேதி வரையும், மன்னார்குடி – ராஜஸ்தான் ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 23 முதல் ஆக.18ம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எழும்பூரில் சீரமைப்பு பணி நடப்பதால் தேஜஸ், செந்தூர், குருவாயூர் உள்பட 5 ரயில்கள் 20ம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: