திருமலை : அனகாப்பள்ளியில் மருந்து தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், பராவாடாவில் உள்ள ஜவஹர்லால் நேரு பார்மா நகரில் தனியார் மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் நேற்று அதிகாலை ரசாயன கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் அளவை சரிபார்க்கச் 3 தொழிலாளர்கள் சென்றனர். அப்போது, விஷவாயு தாக்கியதில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாதுகாப்பு மேலாளர் பரிமி சந்திரசேகர், அனகாப்பள்ளி மாவட்டம், முனபாகாவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி சரகதம் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
அங்கிருந்த ஒடிசா மாநிலம் போடனை சேர்ந்த உதவியாளர் பைது பைசல் மயங்கினார். அவரை உடனடியாக சக தொழிலாளர்கள் மீட்டு ஷீலாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன், பரவாடா இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுன ராவ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷவாயு கசிந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post அனகாப்பள்ளி மருந்து தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி appeared first on Dinakaran.