நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு; நடிகை ரியாவுக்கு நோட்டீஸ்: நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பரபரப்பு

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுஷாந்தின் தந்தை, நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டியது மற்றும் நிதி மோசடி செய்ததாக பாட்னாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் ரியா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பதிலடியாக, ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்தின் சகோதரிகளான பிரியங்கா சிங், மீட்டு சிங் மற்றும் மருத்துவர் ஒருவர் மீது, முறையான மருத்துவ மேற்பார்வையின்றி போலி மருந்துச் சீட்டு மூலம் சுஷாந்திற்கு மருந்துகள் வாங்கிக் கொடுத்ததாக புகாரை அளித்திருந்தார்.இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த குற்றச் செயலும் கண்டறியப்படவில்லை என்று கூறி, தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்து வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, புகார்தாரரான நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்கை முடித்து வைக்கும் புலனாய்வு அமைப்பின் முடிவை எதிர்த்து, புகார்தாரர் தனது கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கும் சட்ட நடைமுறையின் பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு ரியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரியாவின் பதிலுக்குப் பிறகே நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு; நடிகை ரியாவுக்கு நோட்டீஸ்: நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: