நாமக்கல் மாவட்டத்தில் 321 சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கான நேர்காணல் தொடக்கம்

*டிஆர்ஓ தலைமையில் நடைபெற்றது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 321 சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கான நேர்காணல் டிஆர்ஓ தலைமையில் துவங்கி நடைபெற்று வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில், பல ஆண்டுகளாக 321 சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், அருகாமையில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் சமையல் உதவியாளர்கள், இரண்டு பள்ளிகளை சேர்த்து கவனித்துக் கொள்ளவேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்தநிலையில், காலியாக உள்ள சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம், சத்துணவு சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கவேண்டும் என்பது கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்கள், 19 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள் மற்றும் ஒரு மாநகராட்சி பகுதியில் மொத்தம் 321 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதையடுத்து, சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று துவங்கியது.

நேர்காணலை நடத்துவதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் லீலாகுமார்(வளர்ச்சி), மோகன் குமாரமங்கலம்(சத்துணவு) ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பிடிஓ.,க்கள் மற்றும் தாசில்தார்கள், நகராட்சி, பேரூராட்சி ஆணையர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் தலா 5 ஊராட்சி ஒன்றியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் தலைமையிலான குழுவினர், நேற்று நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணல் செய்தனர். இதில், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாநகராட்சி பகுதியில் காலியாக உள்ள 30 பணியிடங்களுக்கு, மொத்தம் 87 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 53 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 47 பேர் மட்டும், நேற்று நடைபெற்ற நேர்கணாலில் கலந்து கொண்டனர். இவர்களிடம் முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் பொது அறிவு, திறன் மேம்பாடு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 50 மதிப்பெண்ணும், பொது அறிவுக்கு 50 மதிப்பெண்ணும் அளிக்கப்படுகிறது.இதேபோல், நேற்று ராசிபுரம், திருச்செங்கோட்டிலும் சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடைபெற்றது.

நேர்காணல் நடத்த நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவினர், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் நேர்காணல் நடத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஒரு வார காலம் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடைபெறும்.

சான்றிதழ் சரிபார்ப்பின்போது, அவர்களின் முன்னுரிமை அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும். மேலும், பொது அறிவு மற்றும் திறன்மேம்பாடு போன்றவற்றில் அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நாமக்கல் மாவட்டத்தில் 321 சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கான நேர்காணல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: