அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து; ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!

சென்னை: அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 170 பேர் உயிரிழந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது; குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 242 பேருடன் இன்று இலண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வந்துள்ள செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன். மேற்படி விமான விபத்தில் சதித் திட்டம் ஏதேனும் உள்ளதா என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆராய்ந்து, இனி வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ளவும், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கவும், படுகாயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை மற்றும் நிவாரண உதவி வழங்கவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து; ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்! appeared first on Dinakaran.

Related Stories: