கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (10.06.2025) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், தலைமையில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் வா.சம்பத், மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையிலான திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தே அமைகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு திட்டங்கள் தனி மனிதன் பயன்பெறும் வகையிலும், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்ற வகையிலும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது 5.25 சதவீதமாகவும், தமிழகத்தை பொறுத்த வரைகயில் 9.69 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெற்று, தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படையாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செயல் திட்டங்கள் அமைகின்றன.
மேலும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மட்டுமன்றி அதில் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக பயன்பெற்று வருகின்றனர். சமத்துவம், சமூக நீதியை நிலை நாட்டுகின்ற வகையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பயன்களை பெறுவதற்கு ஏதுவாக, சீர்மரபினர் நல வாரியத்தினை அடிப்படையாக கொண்டு, அதில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும் அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் துறை ரீதியாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றையதினம் இந்நிகழ்ச்சியின் வாயிலாக சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள், சீர்மரபினர் முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகள், திரவ எரிவாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள், விலையில்லா தையல் இயந்திரங்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடனுதவிக்கான ஆணைகள் என மொத்தம் 1,857 பயனாளிகளுக்கு ரூ.16.71 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை பெற்று, பயன்பெற்று வரும் பயனாளிகள் தாங்கள் பயன்பெறுவது மட்டுமல்லாமல் தங்களை சார்ந்தோர்களுக்கும் திட்டப் பயன்கள் குறித்து எடுத்துரைத்து பயன்பெற செய்தல் வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நான்காண்டு கால நல்லாட்சியில் அடித்தட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பல்வேறு பயன்களை பெற்று பயன்பெறுவதற்கு வழிவகை ஏற்படுத்தி தந்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆவார். 68 சமூகங்களில் சீர்மரபினர் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் அடிப்படையாக திகழ்ந்தவர் ஆவார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு, சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, அச்சமயம் 20,000 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதும் குறிப்பிடதக்கதாகும். அவ்வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் சீர்மரபினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிடும் பொருட்டு, ஒரு இலட்சம் சீர்மரபினர் உறுப்பினர் சேர்ப்பதற்கு அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், 83,446 உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், கல்வி உதவித்தொகை, 60 வயது நிரம்பிய முதியோர்களுக்கான உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மின்னணு பதிவின் மூலம் எளிய முறையில் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், கல்வி உதவித்தொகைக்கென IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வித்தொகையாக ஆண்டு ஒன்றிற்கு ரூ.2 இலட்சம் வழங்கும் திட்டம் உட்பட அனைத்து கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் கடந்த நான்காண்டுகளில் 39,86,622 மாணவ மாணவியர்களுக்கு ரூ.1,242 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி கடந்த நான்காண்டுகளில் 2,170 மாணாக்கர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர். மேற்கண்ட மாணாக்கர்களுக்கு கல்விக்கட்டணம் உட்பட அனைத்தும் மொத்தம் ரூ.178 கோடி மதிப்பீட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் மருத்துவ படிப்புகள் அல்லாது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய துறைகளை சார்ந்த உயர்கல்வியிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தி, அவர்களுக்கான கல்வி கட்டணங்கள் உட்பட அனைத்தையும் திராவிட மாடல் அரசே ஏற்கும் என்ற அறிவிப்பினையும் அறிவித்தன் அடிப்படையில் ரூ.911 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 40,631 மாணாக்கர்களுக்கு பயன்பெற்று வாழ்வில் உயர்ந்த நிலை அடைவதற்கு வழிவகை ஏற்படுத்தியுள்ளார்கள். மேலும், விடுதிகளை தரம் உயர்த்துதல் அடிப்படையில், 36 பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது மட்டுமன்றி, மேலும் 10 புதிய கல்லூரி விடுதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்று, எண்ணற்ற திட்ட பயன்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இன்றையதினம் இந்நிகழ்ச்சியின் வாயிலாக, சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,771 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், சீர்மரபினர் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு ரூ.28,800/-மதிப்பீட்டிலான முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகளையும், திரவ எரிவாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.1,00,500/- மதிப்பீட்டிலான திரவ எரிவாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளையும், சிறுபான்மை இன மக்களுக்கான விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 54 பயனாளிகளுக்கு ரூ.3,24,000/- மதிப்பீட்டிலான மின்மோட்டாருடள் கூடிய விலையில்லா தையல் இயந்திரங்களையும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 15 விவசாயிகளுக்கு ரூ.12,18,000/- மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிகளுக்கான ஆணைகளையும் என ஆக மொத்தம் 1,857 பயனாளிகளுக்கு ரூ.16,71,300/- மதிப்பீட்டிலான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சீர்மரபினர் நல வாரிய துணைத்தலைவர் இராசா அருண்மொழி , மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி , சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இராஜேந்திர பிரசாத், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் திருமதி உமா மகேஸ்வரி, சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி ஜெயமணி மற்றும் பயனாளிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள் appeared first on Dinakaran.