ஷில்லாங்: மேகாலயாவில் கணவரை கொன்று வீசிய பிறகு சோனம் எப்படி தப்பித்தார் என்பதும் எப்படி சிக்கினார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. மபியில் இருந்து மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி பகுதிக்கு மனைவி சோனத்துடன் ஹனிமூன் சென்ற புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷி படுகொலை செய்யப்பட்டார். ஜூன் 2ஆம் தேதி அவரது சடலம் நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1 மணி அளவில் மேகாலயாவில் கொலை நடந்த இடத்தில் இருந்து 1200 கிமீ தொலைவில் உள்ள உபி மாநிலம் காசிப்பூரில் வைத்து அவரது மனைவி சோனம் கைது செய்யப்பட்டார். கூலிப்படையை ஏவி அவர் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாஹா, கூலிப்படையாக செயல்பட்ட ஆகாஷ், ஆனந்த், விகாஷ் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலையை செய்த பிறகு சோனம் எப்படி தப்பித்தார், எப்படி சிக்கினார் என்பது தான் இப்போதைய கேள்வி. அதுபற்றிய விவரம் வருமாறு: மே 11 அன்று ராஜாவுடன் நடந்த திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு மறுவீட்டிற்காக சோனம் வீட்டிற்கு சென்றனர். அங்குதான் காதலன் ராஜ் குஷ்வாகாவுடன் இணைந்து சோனம் கொலைத் திட்டத்தை வகுத்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் கூலிப்படையை சோனம், ராஜ் குஷ்வாஹா இருவரும் சந்தித்து பேசினர். அதன்படி திருமணம் முடிந்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு, மே 20 அன்று, அவர்கள் தேனிலவுக்காக மேகாலயாவுக்குச் சென்றனர். கூலிப்படையினர் மே 21 அன்று கவுகாத்திக்கு சென்று, அங்கிருந்து, சோனம் மற்றும் ராஜாவைத் தொடர்ந்து சென்று மே 22 அன்று ஷில்லாங்கை அடைந்தனர். மே 23 அன்று கொலை நடந்துள்ளது. காதலன் ராஜ் குஷ்வாகா கொலை நடந்த இடத்தில் இல்லை.
கூலிப்படைக்கு ராஜாவை கொல்லும்படி உத்தரவிட்டது சோனம் தான் என்பது தெரிய வந்துள்ளது. ராஜா கொல்லப்பட்ட பிறகு, கொலை நடந்த இடத்தில் இருந்து 11 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் சோனம் மற்றும் 3 கூலிப்படையினர் இணைந்து இருந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது. பின்னர் சோனம் அங்கிருந்து கவுகாத்திக்கு சென்று ரயில் மூலம் சொந்த ஊரான மபி மாநிலம் இந்தூருக்கு சென்றார். மே 25 அன்று இந்தூர் சென்ற அவரை, ஓட்டலில் காதலன் தங்க வைத்தார். அருகில் உள்ள மற்றொரு ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். பின்னர் மறுநாள் உபிக்கு கார் மூலம் சோனம் அனுப்பிவைத்தார். ராஜா கொலையில் போலீசுக்கு ஏற்பட்ட முதல் சந்தேகம் ஹனிமூன் தொடர்பான படங்கள் எதையும் ராஜா மற்றும் சோனம் எடுக்கவில்லை. மேலும் சமூக ஊடகங்களிலும் பதிவிடவில்லை. இதில் தான் போலீசுக்கு முதல் சந்தேகம் எழுந்தது.
2வது கொலை நடந்த இடத்தில் கிடைத்த வெட்டுக்கத்தி, மேகாலயாவில் பயன்படுத்தக்கூடியது இல்லை. அசாம் மாநிலம் கவுகாத்தியில் வாங்கியது தெரிய வந்தது. அடுத்ததாக அவர்கள் பயன்படுத்திய பைக் சிக்கியது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக ராஜா, சோனம் தம்பதிக்கு கைடாக இருந்த ஆல்பர்ட் வாக்குமூலம் தான் சோனம் மீது போலீஸ் பார்வையை திரும்ப வைத்தது. ராஜா கொலை செய்யப்பட்ட பகுதியில் அவருடன் 3 பேர் இந்தி பேசியபடி நடந்து சென்றதாகவும், சோனம் கொஞ்சம் பின்னால் தனியாக நடந்து சென்றதாகவும் தெரிவித்தார். இதுதான் இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக அமைந்தது. மே 23 அன்று பிற்பகல் 2:15 மணிக்கு, ராஜாவின் சமூக ஊடகக் கணக்கைப் பயன்படுத்தி சோனம், ‘ஏழு பிறப்புக்கான திருமணம்’ என்று பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுவும் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கொலை நடந்த இடத்தில் ரத்தத்தில் நனைந்த ஆகாஷின் சட்டையையும் போலீசார் கண்டுபிடித்தனர். அங்கிருந்து 6 கி.மீ தொலைவில் சோனம் பயன்படுத்திய ரெயின்கோட் கண்டெடுக்கப்பட்டது. அதை ஆகாஷுக்கு, சோனம் கொடுத்தது தெரிய வந்தது. ராஜாவின் தாயாரிடம் கடைசியாக பேசிய சோனம், தனது கணவருக்காக விரதம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் ஓட்டலில் அன்று சாப்பிட்டதை சிசிடிவி மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். இதன் மூலம் சோனம், அவரது காதலன் ராஜ் மற்றும் கூலிப்படையினரை மேகாலயா போலீசார் மிகச்சிறப்பாக சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
ஆபரேஷன் ஹனிமூன்
மேகாலயாவில் ஜூன் 2ஆம் தேதி ராஜாவின் உடல் கைப்பற்றப்பட்ட மறுநாளே, மேகாலயா காவல்துறையினருக்கு தேனிலவு கொலையில் சோனம் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் ஒட்டுமொத்தமாக கைது செய்ய ‘ஆபரேஷன் ஹனிமூன்’ என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 20 குழு அமைத்து, அதில் 120 போலீசார் இடம் பெற்றனர். பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போதுதான் சிசிடிவி காட்சிகளில் கொலை நடந்த இடத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் கூலிப்படையை சேர்ந்த 3 பேருடன் சோனம் இருப்பது தெரிய வந்தது. சோனம் தனது கணவரைக் கொல்ல மட்டுமே மேகாலயாவுக்கு ஹனிமூன் வந்துள்ளார்.
கொலை செய்ய மறுத்த கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் தருவதாக கூறிய சோனம்
ராஜாவை கொல்ல கூலிப்படைக்கு முதற்கட்டமாக ரூ.4 லட்சம் சோனம் வழங்கியுள்ளார். கொலை நடந்த சிரபுஞ்சி பகுதியில் வெறிச்சோடிய இடத்தை அடைந்ததும், சோனம் தனது கணவரைக் கொல்லும்படி கூலிப்படைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் மலைப்பகுதியில் நீண்ட தூரம் நடந்ததால் கொலையாளிகள் சோர்வாக இருப்பதாகக் கூறி அவரைக் கொல்ல மறுத்துவிட்டதாகவும், அதன்பின்னர் சோனம், கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் தருவதாக கூறியதும், அவர்கள் ராஜாவை கொன்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மலைப்பகுதியில் இருந்து சிரபுஞ்சி நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்கில் ராஜாவின் உடலை வீசுவதற்கு கூலிப்படைக்கு சோனம் உதவியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாமியாரிடம் விரதம் என்று கூறிவிட்டு ஓட்டலில் சாப்பிட்டு சிக்கிய சோனம்
ராஜாவின் தாயாரிடம் தான் சோமன் கடைசியாக பேசினார். அப்போது கணவரின் உடல் நலத்திற்காக விரதம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் மேகாலயாவில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சோனம் விரதம் இருந்ததாக கூறியது பொய் என்பதும், அவர் ஓட்டலில் சாப்பிட்டதும் தெரிய வந்தது. இதில் இருந்து தான் சோனத்தின் மீதான போலீசாரின் சந்தேகப்பிடி இறுகியது. மேலும் காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜா கொலையை, கொள்ளைக்காக நடந்த கொலையாக சித்தரிப்பதே சோனத்தின் திட்டம். ஆனால் போலீஸ் மிகச்சிறப்பாக கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்துவிட்டது.
சோனம், 4 குற்றவாளிகளையும் மேகாலயாவுக்கு அழைத்துச்சென்ற போலீசார்
போலீசால் கைது செய்யப்பட்ட சோனம், காதலன் ராஜ், கூலிப்படையை சேர்ந்த ஆகாஷ், ஆனந்த், விகாஷ் ஆகியோர் நேற்று மேகாலயா அழைத்துச் செல்லப்பட்டனர். சோனத்தை விமானம் மூலம் போலீசார் கொல்கத்தா கொண்டு சென்று, அங்கிருந்து அடுத்த விமானம் மூலம் ஷில்லாங்கிற்கு நேற்று நள்ளிரவு அழைத்துச்சென்றனர். அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து போலீசார் விசாரிக்க உள்ளனர்.
லொக்கேஷன் ஷேர் செய்தாரா?
ஷில்லாங்கிற்கு அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு கூலிப்படை வருவதற்காக சோனம் தனது செல்போனில் இருந்து லொக்கேஷன் ஷோ் செய்தாரா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ராஜா இறுதிச்சடங்கில் பங்கேற்ற சோனம் காதலன்
சோனம் காதலன் ராஜ் குஷ்வாஹா ஒரு நம்பகமான ஊழியர். மேகாலாயாவில் இருந்து ராஜா ரகுவன்ஷியின் சடலம் இந்தூர் வந்த போது இரு குடும்பங்களுக்கும் ஆறுதல் தெரிவித்து இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார். சோனமின் தந்தை தேவி சிங்கிற்கு ஆறுதல் கூறும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சோனமின் சகோதரர் தனது சகோதரி மற்றும் மைத்துனர் ராஜாவை தேடுவதற்காக மேகாலயா சென்றபோது, இந்தூர் தொழிற்சாலையை ராஜ் குஷ்வாஹாவிடம் ஒப்படைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
சோனத்தின் தாயாருக்கு எல்லாம் தெரியும்: ராஜாவின் சகோதரர் குற்றச்சாட்டு
ராஜா ரகுவன்ஷியின் சகோதரர் விபின் கூறுகையில்,’ ராஜ் குஷ்வாஹா சோனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளர். அவர் நிரபராதி அல்ல. இந்த வழக்கில் 5க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். சோனம் சரணடைந்தபோது, அவர் தனது சகோதரருக்கு போன் செய்து யாரோ தன்னை இங்கே இறக்கிவிட்டதாகக் கூறினார். அவள் நடிக்கிறாள். காவல்துறையினர் நடத்தும் விசாரணைகளில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ராஜ் குஷ்வாஹா நிரபராதியாக இருந்திருந்தால், அவர் சோனமுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்க மாட்டார்.
சோனம் ராஜின் சொந்த ஊரில் கைதாகிஉள்ளார். ராஜா கொலையான பிறகு, அவரது உடல் மீட்கப்பட்டது வரை சோனம், ராஜுடன் மணிக்கணக்கில் பேசியிருக்கிறார். சோனம் இப்படி மாறுவார் என்று எங்களுக்குத் தெரியாது. சோனமின் தாய் எங்களிடமிருந்து விஷயங்களை மறைத்திருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் முழு கதையையும் எங்களிடம் சொல்லவில்லை, மேலும் ராஜ் சோனமுடன் தொடர்பு வைத்திருப்பது அவருக்குத் தெரிந்திருக்கும். இந்த வழக்கில் 5க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்றார்.
தன்னை பாதிக்கப்பட்டவராக காட்ட முயற்சித்த சோனம்
உத்தரப்பிரதேச காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அமிதாப் யாஷ் கூறுகையில்,’ போதை மருந்து கொடுத்து மயக்க நிலையில் தன்னை உபி மாநிலம் காசிப்பூருக்கு அழைத்து வந்து விட்டதாக சோனம் தெரிவித்தார். மேலும் சோனம் காவல்துறையினரிடம் தன்னை பாதிக்கப்பட்டவராகக் காட்டிக் கொண்டார். போலீசார் இறுதியில் தன்னைத் தொடர்புகொள்வார்கள் என்பதை அறிந்த அவர் தனது குடும்பத்தினரிடம் தனது இருப்பிடம் குறித்து தெரிவித்தார். அவருக்கு காவல்துறையின் விசாரணை நடைமுறைகள் பற்றிய அடிப்படை அறிவு இல்லை. பாதிக்கப்பட்டவராகக் காட்டிக்கொள்வதன் மூலம் தப்பிக்க முடியும் என்று நினைத்தார். ஆனால் அவர் தோல்வியடைந்தார். மேகாலயா காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டு இந்த வழக்கை கையாள்கிறது. உதவி கேட்டால் நாங்கள் உதவுவோம்’ என்றார்.
என் மகன் நிரபராதி சோனத்தின் காதலன்: ராஜ் தாய் கதறல்
ராஜா குஷ்வாஹா கொலையில் சோனத்தின் காதலன் ராஜ்ஜை போலீசார் கைதுசெய்தது குறித்து அவரது தாயார் கூறும்போது,’ எனது மகன் நிரபராதி. அவர் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என் மகனால் இதுபோன்ற எதையும் ஒருபோதும் செய்ய முடியாது. அவனுக்கு 20 வயதுதான் ஆகிறது… அவன் என் ஒரே மகன்… அவன் சோனமின் சகோதரனின் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தான். சோனமும் அங்கே வேலை செய்து வந்தாள். இருவரும் அடிக்கடி பேசி வந்தனர் என்பதால் அவன் மீது பொய்யாக குற்றம் சாட்டப்படுகிறது. அரசு அவனை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவன் நிரபராதி’ என்றார்.
பெற்றோரிடம் நோ சொல்ல முடியவில்லை ஆனால்… கொலை செய்ய முடிகிறது: கங்கனா ரனாவத் ஆவேசம்
மேகாலயா ஹனிமூன் கொலை தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் கூறுகையில்,’இதை யாராவது விளக்க முடியுமா!! பெண் தன் சொந்த பெற்றோருக்கு பயப்படுவதால் திருமணத்தை மறுக்க முடியாது. ஆனால் அவள் கூலிப்படையைக் கொண்டு ஒரு கொடூரமான கொலையைத் திட்டமிடலாம். காலையிலிருந்து இது என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை சிந்தித்து சிந்தித்து இப்போது தலைவலி வருகிறது. அவளால் தன் காதலனை கைவிடவோ அல்லது ஓடிப்போகவோ கூட முடியவில்லை எவ்வளவு கொடூரமான எல்லாவற்றிற்கும் மேலாக அபத்தமான மற்றும் முட்டாள் .
இந்த ஊமை பெண்களை ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது, அவர்கள் எந்த சமூகத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்… நாம் அடிக்கடி அவர்களைப் பார்த்து சிரிக்கிறோம், அவர்கள் பாதிப்பில்லாதவர்கள் என்று நினைக்கிறோம், ஆனால் அது உண்மையல்ல, புத்திசாலிகள் தங்கள் சொந்த நலனுக்காக மற்றவர்களை சேதப்படுத்தலாம், ஆனால் ஒரு ஊமை நபருக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.உங்களைச் சுற்றியுள்ள ஊமைகளைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மேகாலயா ஹனிமூன் பயணத்தில் கணவரை கொன்று வீசிய பிறகு சோனம் எப்படி தப்பித்தார்? எப்படி சிக்கினார்? ரத்தத்தை உறைய வைக்கும் கிரைம் த்ரில்லர் appeared first on Dinakaran.