41 ஆண்டுக்குப் பிறகு சாதனை: இந்திய வீரர் சுபன்ஷு குழு இன்று விண்வெளி பயணம்


புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா குழுவினர் இன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணிக்க உள்ளனர். இதன் மூலம் 41 ஆண்டுக்குப் பிறகு விண்வெளிக்கு செல்லும் 2வது இந்திய வீரராக சுபன்ஷு சாதிக்க உள்ளார். ககன்யான் திட்டத்தின் மூலம் முதல் முறையாக இந்தியா மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிமுகம் செய்தார். அவர்கள் 4 பேரும் ரஷ்யாவிலும், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ பயிற்சி மையத்திலும் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இக்குழுவில் இடம் பெற்றுள்ள சுபன்ஷு சுக்லா, இஸ்ரோ-நாசா ஒத்துழைப்புடன் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனம் மேற்கொள்ளும் வணிக விண்வெளிப் பயணத்தின் ஒருபகுதியாக விண்வெளி செல்ல உள்ளார். சுபன்ஷூவுடன் ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த மேலும் 3 வீரர்கள் ஆக்ஸிம்-4 திட்டத்தில் இணைந்துள்ளனர். இக்குழுவினர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று 14 நாட்கள் தங்கியிருந்து விண்வெளியில் வேளாண் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பயிறு, வெந்தய கீரை செடிகள் விண்வெளியில் வளர்ப்பது தொடர்பாக ஆய்வு செய்கின்றனர். கடைசியாக 1984ல் சோவியத் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் இந்திய வீரர் ராகேஷ் சர்மா விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

அதன் பின் 41 ஆண்டுக்குப் பிறகு சுபன்ஷு விண்வெளி சென்று சாதிக்க உள்ளார். லக்னோவில் பிறந்தவரான சுபன்ஷு இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனாக பணியாற்றுபவர். அமெரிக்காவின் புளோரிடா கேப்கெனவரவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணி அளவில் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம் மூலம் சுபன்ஷு குழுவினர் செல்ல உள்ளனர். முன்னதாக இந்த விண்கலம் நேற்று ஏவப்பட இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பயணம் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆக்ஸிம்-4 திட்டத்திற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ ரூ.550 கோடியை செலவிட்டுள்ளது.

The post 41 ஆண்டுக்குப் பிறகு சாதனை: இந்திய வீரர் சுபன்ஷு குழு இன்று விண்வெளி பயணம் appeared first on Dinakaran.

Related Stories: