வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்திற்கு 36 பேர் பலி: அசாம், அருணாச்சலில் மட்டும் 22 பேர் பலி

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 36 பேர் பலியாகி விட்டனர். அசாம், அருணாச்சலில் மட்டும் 22 பேர் பலியாகி விட்டனர். வடகிழக்கு மாநிலங்களாக அசாம், அருணாச்சல், மிசோரம், சிக்கிம், மேகாலயா மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறார்கள். 36 பேர் வெள்ளத்திற்கு பலியாகி விட்டனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அசாம் மாநிலத்தில் இதுவரை வெள்ளத்திற்கு 11 பேர் பலியாகி விட்டனர். 5.35 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

20 மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. அருணாச்சலில் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆகி விட்டது. 23 மாவட்டங்களில் 156 கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளன. 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் 5 பேர் பலியாகி விட்டனர். 552 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 152 வீடுகள் உருக்குலைந்து விட்டன. 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களில் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் 56 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,477 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 93 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலம் டீஸ்டா ஆற்றில் கார் கவிழ்ந்து காணாமல் போன எட்டு சுற்றுலாப் பயணிகளையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கு 5வது நாளாக தேடுதல் பணி நடக்கிறது. விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த 11 பேரில், இருவர் ஒடிசாவைச் சேர்ந்த ஸ்வயம் சுப்ரதிம் நாயக் மற்றும் சாய்ராஜ் ஜெனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இரவில் அவர்கள் மீட்கப்பட்டனர். ஒருவர் பலியாகி விட்டார். காணாமல் போன எட்டு சுற்றுலாப் பயணிகளில் 4 பேர் ஒடிசாவைச் சேர்ந்த வர்கள். அசாம், சிக்கிம் முதல்வர்களுடனும், மணிப்பூர் கவர்னர் அஜய்பல்லாவுடனும் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வழியாக பேசி வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் வடகிழக்கு மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.

* ராணுவ வீரர்களை மீட்க பேரிடர் குழு விரைவு
வடக்கு சிக்கிமில் உள்ள சாட்டனில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 6 வீரர் மாயமாகி விட்டனர். அவர்களை மீட்க 23 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் குழு விரைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் பாக்யோங் விமான நிலையத்திலிருந்து சாட்டனுக்குப் புறப்பட்டது.

The post வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்திற்கு 36 பேர் பலி: அசாம், அருணாச்சலில் மட்டும் 22 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: