வைராபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் 600 டன் நெல் கொள்முதல்

ஈரோடு,மே30: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக ஈரோடு மண்டலத்தில், காலிங்கராயன் பாசன பகுதி விவசாயிகளிடமிருந்து வைராபாளையம் மற்றும் கணபதிபாளையம் என இரு மையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, வைராபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் காலிங்கராயன் பாசனப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்களை டிராக்டர்கள் மூலமாக கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர், இயந்திரத்தின் மூலமாக கல், மண், தூசுகளை நீக்கி, மூட்டைகளில் பிடித்து, கொள்முதல் செய்து வருகிறனர். கடந்த 6ம் தேதி முதல் இந்தக் கொள்முதல் நடைபெற்று வருகிறது.கடந்த சில நாள்களாக மழை மற்றும் காற்று காரணமாக நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 3 நாள்களாக ஈரோடு பகுதியில் மழை இல்லாததால் நேற்று வைராபாளையம் மையத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இதில், சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,450க்கும், குண்டு ரக நெல் குவிண்டால் ரூ.2,405க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. சராசரியாக நாளொன்றுக்கு 20 முதல் 40 டன் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி தொடங்கி தற்போது வரை சுமார் 600 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வைராபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் 600 டன் நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Related Stories: