சத்தியமங்கலம்,ஜூலை21: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு,திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்க நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றபின் முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்ட பவானிசாகர் அணை கரையின் மொத்த நீளம் 9 கி.மீ தூரம் ஆகும்.
1955ம் ஆண்டு அணை கட்டுமான பணி முடிந்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் அணை பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் மேல் பகுதியில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் உட்புறப் பகுதிகளில் படிந்துள்ள உப்பு படலங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பிரத்யேக இயந்திரம் வரவழைக்கப்பட்டு அணையின் மேல் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பவானிசாகர் அணையின் கரையில் உள்ள தடுப்புச்சுவர்களுக்கு வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 105 அடி உயரம் உள்ள பவானிசாகர் அணையில் தற்போது நீர்மட்டம் 97.23 அடியை எட்டியுள்ளது.நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 4986 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 1105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
The post பவானிசாகர் அணை பராமரிப்பு appeared first on Dinakaran.
