புதுடெல்லி: சர்வதேச அளவில் தீவிரவாத அச்சுறுத்தல், ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) மூலம் இரண்டு கூடுதல் கவச வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவானது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ நடத்திய துல்லியமான தாக்குதல் மற்றும் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் ஜெய்ஷங்கர், ‘இசட்’ பிரிவு பாதுகாப்பின் கீழ் இருந்தாலும், அவர் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்ந்து சர்வதேச அளவில் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் அவருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதனால், அவரது பயணங்களின் போது உயர்நிலை பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்காக இந்த கவச வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கவச வாகனங்கள், 9மிமீ துப்பாக்கிகள், ஏகே-47, மற்றும் மேம்பட்ட வெடிபொருட்களின் தாக்குதல்களைத் தாங்கக்கூடிய உயர்தர கவசப் பொருட்களால் ஆனவை. மேலும் இவரது பயணத்தின் போது அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த கசவ வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனடே கடந்த மார்ச் மாதம், அவர் லண்டன் சென்றிருந்த போது, அங்கு அவருக்கு பாதுகாப்பு மீறல்கள் நடந்ததால் தற்போது மேலும் அவரது பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
லண்டனில் காலிஸ்தானி ஆர்வலர்கள் அவரது வாகனத்தை நோக்கி தாக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம், அவரது பயணத்தின் போது உயர் பாதுகாப்பு அவசியம் என்பதை உறுதிப்படுத்தியது. மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சருக்கு கூடுதல் பாதுகாப்பு: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.