பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் : சிபிஐ தரப்பு வழக்கறிஞர் பேட்டி

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். 9 பேருக்குமான தண்டனை விவரம் நண்பகல் 12 மணியளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இவ்வழக்கில் குற்றவாளிகள் அழித்த ஆதாரங்கள் அனைத்தும் 2 தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டதால், எந்தவித சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் அச்சமின்றி சிபிஐ-யிடம் சாட்சியம் அளித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக பேட்டி அளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன்,” 9 பேரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 376 (D) கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 376 (2N) மீண்டும் மீண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது. வழக்கில் மின்னணு ஆதாரங்கள் மிக பெரிய உதவியாக இருந்தது. 48 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது, ஒருவர் கூட பிறழ்சாட்சி ஆகவில்லை. உச்சபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். இந்த வழக்கின் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்க கூடாது, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். “எனத் தெரிவித்தார்.

The post பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் : சிபிஐ தரப்பு வழக்கறிஞர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: