ரோகித் சர்மாவை தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிப்பு!!

மும்பை : ரோகித் சர்மாவை தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் கடினமான முடிவை எடுத்துள்ளதாக இன்ஸ்டாவில் கோலி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது மிகவும் கடினமான முடிவாகும். டெஸ்ட் போட்டிகள்தான் என்னை செதுக்கியதுடன், வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளன. கடினமான முடிவாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். டெஸ்ட் விளையாடுவது எப்போதுமே எனக்கு நெருக்கமானதாகும். டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் தந்துவிட்டேன்.

இதயப்பூர்வமான நன்றி உணர்வுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வேன்.” இவ்வாறு தெரிவித்தார். 2011ல் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் விராட் கோலி. கடைசியாக கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 123 டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள் உள்பட 9230 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்ததே கோலியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதில் 7 இரட்டை சதங்கள், 30 சதங்கள், 31 அரை சதங்கள் அடங்கும். ரோகித் சர்மா, விராட் கோலி என இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல் டி20 உலக கோப்பை வென்ற கையுடன் இருவரும் டி20 ஃபார்மட்டில் இருந்து ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

The post ரோகித் சர்மாவை தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: