விபரீத ஆசை உயிரை பறித்தது ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்த 2 வாலிபர்கள் பலி: பெரம்பலூர் அருகே சோகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தொண்டமாந்துறை கல்லாற்றில் தேங்கிநின்ற தண்ணீரில் மின்சார கம்பி போட்டு மீன்பிடித்த 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராமம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தினேஷ்குமார் (28). அதே பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித் (25). இருவரும் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தனர். இந்நிலையில், தொண்டமாந்துறை கிராமத்தையொட்டி செல்லும் கல்லாற்றில், பல இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரில் இவர்கள் 2 பேரும், மீன் பிடிக்க செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு கல்லாற்றுக்கு சென்ற இருவரும், நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. மீன்களை கொத்தாக பிடிக்க மின்சார பாய்ச்சி பிடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி, ஆற்றங்கரையில் உள்ள மின் கம்பத்தில் ஒரு வயரை இணைத்து திருட்டுதனமாக மின்இணைப்பை ஏற்படுத்தி உள்ளனர். மின்சாரம் உள்ள வயரை தண்ணீரில் போட்டால் மின்சாரம் தாக்கி மயக்க நிலைக்கு செல்லுகிற மீன்கள் தண்ணீருக்கு மேலே வந்து மீதக்கும். அப்போது உடனடியாக அவற்றை சேகரித்து கரைக்கு கொண்டு வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து தண்ணீருக்குள் நீந்தி சென்றுவிடும். இதற்காக இருவரும் நெற்றியில் ஹெட் லைட் அணிந்தபடி மீன்பிடிக்க தண்ணீரில் மின்வயரை போட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து ரஞ்சித் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் தொண்டமாந்துறை ஆற்றங்கரைக்கு சென்ற சிலர் தண்ணீரில் தினேஷ்குமாரும், ரஞ்சித்தும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்புத்துறை 2 பேர் உடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தொண்டாமாந்துறை கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், அரும்பாவூர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் கயல்விழி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, இருவரது சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் தொடர்பாக வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ், பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக்கிய ராஜ் ஆகியோர் தொண்டமாந்துறை கிராமத்திற்குச் சென்று சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர்.

 

The post விபரீத ஆசை உயிரை பறித்தது ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்த 2 வாலிபர்கள் பலி: பெரம்பலூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: