போலீஸ் கமிஷனர் எச்சரிக்கையை மீறி மதுரையில் நடிகர் விஜய் ரோடு ஷோ: ஏர்போர்ட்டில் பயணிகள் தவிப்பு

அவனியாபுரம்: தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்பட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடக்க உள்ளது. இதற்காக கொடைக்கானல் செல்வதற்காக விஜய், சென்னையிலிருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு வந்தார். அவரை வரவேற்க ரசிகர்கள் மதுரை விமான நிலையத்திற்குள் குவிந்தனர். இதனால், விமான பயணிகளை வழியனுப்ப, வரவேற்க வந்த உறவினர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தகவலறிந்த மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பிற்கு 300 போலீசார் நிறுத்தப்பட்டு, விமானநிலைய வளாகத்திற்குள் இருந்த ரசிகர்கள், தொண்டர்கள் வெளியேற்றப்பட்டு, வெளியில் தடுப்புகள் ஏற்படுத்தி, அதன்பின்னே அவர்களை நிறுத்தினர். இதில் தவெகவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விமான நிலையத்தில் இருந்த தடுப்புகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.

மாலை 4 மணிக்கு தனி விமானத்திலிருந்து விஜய் வந்திறங்கி தனது வேனில் கொடைக்கானலுக்கு புறப்பட்டார். அப்போது அவரை ரசிகர்கள் வரவேற்றனர். விமானநிலைய உள்வாயில் வழியாக வெளியில் வந்த விஜய் திறந்த வேனில் ஏறினார். அப்போது ரசிகர்கள் சிலர் வேனில் ஏறினர். இதனால் வேனின் முன்பகுதி பேனட் உடைந்து சேதமானது. மதுரை கமிஷனர் லோகநாதன் ரோடுஷோ நடத்தக் கூடாது என அறிவுறுத்தியும், அதையும் மீறி திறந்த வேனில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்தும், வணக்கம் கூறியும் விமானநிலையத்திலிருந்து பெருங்குடி அம்பேத்கர் சிலை வரையிலும் ரோடு ஷோவாக நடிகர் விஜய் சென்றார்.

இதனால் மாலை 4 மணிக்கு மேல் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் செல்லும் விமானங்களில் செல்வதற்கு வந்த பயணிகள் விமானநிலையத்தை நெருங்க முடியாமல் பெரும் தவிப்பிற்கு ஆளாகினர். பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளும் அவதிப்பட்டனர். விஜய் வருவதற்கு முன் போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் அவரை வரவேற்க முண்டியடித்து ரசிகர்கள் ஓடியதால் பலரது செருப்புகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. கூட்டம் கலைந்த பின்பு விமான நிலைய பகுதி செருப்புக்கடை போல் காட்சியளித்தது.

 

The post போலீஸ் கமிஷனர் எச்சரிக்கையை மீறி மதுரையில் நடிகர் விஜய் ரோடு ஷோ: ஏர்போர்ட்டில் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: