தற்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில் கன்னிராஜபுரம் ரோச்மா நகர் துவங்கி தனுஷ்கோடி, எஸ்.பி.பட்டினம் வரை சுமார் 256 கிமீ கடற்கரை கிராமங்களை கொண்டதால் தமிழ்நாட்டில் பெரிய கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் திகழ்கிறது. இங்கு அழகன்குளம், தொண்டி, தேரிருவேலி மற்றும் பெரியபட்டினம் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளின் அறிக்கைப்படி சங்க காலத்திலேயே பல துறைமுகங்களையும், வெளிநாட்டு வணிக தொடர்புகளையும் கொண்டிருந்தது தெரிய வருகிறது. வரலாற்று தடயங்கள்: பாண்டிய மன்னர்கள், சேதுபதி மன்னர்கள் ஆட்சி காலங்களில் சேரர், சோழர், நாயக்கர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, வளைகுடா நாடுகள், சீனா, ஐரோப்பியர்கள், ரோமானியர்கள் என பல்வேறு வெளிநாட்டினரும் வணிகரீதியில் தொடர்புடைய பல சான்றுகள் உள்ளன. மாவட்டத்தில் கண்டறியப்பட்ட அகழாய்வுகள், வெளிநாட்டு அறிஞர்களின் நூல்கள், பாண்டியர்கள், சேதுபதி மன்னர்களின் கல்வெட்டுகள், கோயில்கள், சிலைகள் மற்றும் வரலாற்று தகவல்களின் அடிப்படையில் இதை அறியலாம். மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், சூரியூர், எஸ்.பி.பட்டினம், மருங்கூர், முல்லைக்கோட்டை, நத்தம்குலம்பதம், புதுமடம், மங்கலம், கூரான்கோட்டை, களிமண்குண்டு உள்ளிட்ட கிராம பகுதிகளில் பல தொல்பொருட்கள், வரலாற்று தடயங்கள் நிறைந்து கிடக்கிறது.
அருங்காட்சியகம்: தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் தொல்பொருள் குறித்த தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் தடயங்கள் சேகரிக்கும் பணி, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது ராமநாதபுரத்தில் சங்க கால பாண்டியர்களின் கடல் வாணிப சிறப்பை விளக்கும் வகையில் ரூ.21 கோடி மதிப்பில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் அருகே உள்ள மண்டபம் பகுதியில் அழகன்குளம் உள்ளிட்ட மாவட்டத்தில் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உள்ளடக்கிய 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நாவாய் அருங்காட்சியகம் அமைத்திட அரசு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மாவட்ட மக்கள், பழமை ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
The post ராமநாதபுரம் மாவட்டத்தின் புது மகுடம்; ரூ.21 கோடியில் அமையுது நாவாய் அருங்காட்சியகம்: தொல்லியல் வரலாறு துல்லியமாக அறியலாம் appeared first on Dinakaran.