ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாடு 99.9% தேர்ச்சி

சென்னை: இந்திய இடைநிலைக் கல்வி சான்று (ஐசிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளிச் சான்று (ஐஎஸ்சி) படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், தமிழ்நாடு மாணவ மாணவியர் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின், இந்திய பள்ளிக் கல்வி சான்று தேர்வுகளுக்கான வாரியத்தின் (சிஐஎஸ்சிஇ) அறிவிப்பின்படி ஐஎஸ்சி மூலம் 12ம் வகுப்பு தேர்வில் தமிழ்நாட்டில் 3052 மாணவ மாணவியர் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். அவர்களில் 3051 பேர் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன், 99.9 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மாணவர்கள் சார்பில் 1646 பேர் தேர்வு எழுதிய நிலையில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஐசிஎஸ்இ மூலம் 10ம் வகுப்பு தேர்வில் 6174 மாணவ மாணவியர் தேர்வில் பங்கேற்று 6171 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி 99.95 சதவீதம் தேர்ச்சியை எட்டியுள்ளனர். இந்த 10ம் வகுப்பு தேர்வில் 2 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.

மேற்கண்ட 12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான தேர்வில் இந்த ஆண்டு இடம் பெற்ற கேள்வித்தாள்கள் மிகவும் கடினமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மாணவ மாணவியர் ஏறக்குறைய 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதித்துக் காட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக பயன்பாட்டு முறையிலான கேள்விகள் அதிகம் இடம் பெற்றதுடன், ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள் இடம்பெறவில்லை. பல கேள்விகள் கொள்குறி வினாக்கள் அனைத்து கடினமாக கேட்கப்பட்டன. கடினமாக கேள்விகள் கேட்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், 100 மதிப்பெண்கள் பெறுவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு கடின கேள்விகளால் குறைந்துள்ளது.

கேள்விகள் சவாலானதாக இருந்தாலும் மதிப்பெண்கள் ஏமாற்றம் அளிக்காத வகையில் 99 வரை மாணவ மாணவியர் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் உயிரியல், உளவியல் பாடங்களில் முழு மதிப்பெண்களை பெற்றனர். ஆனால் இந்த ஆண்டுக்கான கேள்விகளை பொருத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கடினமாக கேட்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து இந்திய பள்ளிக் கல்வி சான்று படிப்பு கவுன்சிலும் தெரிவித்து இருந்தது. இதனால் மேற்கண்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் கடினமாக படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

 

The post ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாடு 99.9% தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: