மேலும் இருநாடுகள் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்ற நிலை உருவாகி உள்ளது. போரை தடுக்க தற்போது அமெரிக்கா களம் இறங்கி உள்ளது. இதற்காக இருநாட்டு தலைவர்களிடமும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை போனில் தொடர்பு கொண்டு, தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக கண்டித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் கூறுகையில்,’ இந்தியா மேற்கொள்ளும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றங்களை குறைத்து, தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் ஒத்துழைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் போனில் பேசிய ரூபியோ, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும் கூறியிருக்கிறார். அவரிடம் ஜெய்சங்கர்,’ பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள், ஆதரவாளர்கள், சதித்திட்டம் தீட்டியவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார். இதை தனது எக்ஸ் தளத்திலும் அவர் பதிவு செய்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ நடத்திய பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் டாமி புரூஸ் கூறுகையில்,’ பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு அமைச்சர் ரூபியோ தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். தெற்காசியாவில் பதற்றங்களைத் தணிக்கவும் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணவும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றவும் அவர் இந்தியாவை அறிவுறுத்தினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்புடன் பேசுகையில் இருநாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கவும், நேரடி தகவல்தொடர்புகளை மீண்டும் தொடங்கவும், அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட வலியுறுத்தினார்.
பஹல்காமில் நடந்த தாக்குதலைக் கண்டிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அப்போது அவர் தெரிவித்தார். தீவிரவாதிகளின் கொடூரமான வன்முறைச் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்க வைப்பதில், இந்த நியாயமற்ற தாக்குதலை பற்றி விசாரிப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவும் அவர் வலியுறுத்தினார்’ என்று தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று பீட் ஹெக்சேத், ஒன்றிய பாதுகாப்புச் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பஹல்காம் தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். அப்போது, ‘உலகம் முழுவதும் தீவிரவாதத்தை தூண்டிவிட்டு, நிலையற்ற தன்மைக்கு உள்ளாக்கும் ஒரு முரட்டு நாடாக பாகிஸ்தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்து வந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகம் இனி கண்ணை மூடிக்கொண்டு தீவிரவாதத்தை அணுக முடியாது’ என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்,’ பஹல்காம் தாக்குதலை பொறுத்தவரையில் அமெரிக்கா இந்தியாவுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது. இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை ஆதரிக்கிறது’ என்றார். இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சகம் வௌியிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போரை தடுக்க அடுத்தடுத்து அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post இந்தியா-பாகிஸ்தான் இடையே போரை தடுக்க அமெரிக்கா முயற்சி: இருநாட்டு தலைவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.