42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு தொல்காப்பியர் பூங்கா மறுசீரமைப்பு பணிகள் மும்முரம்

* புதிய நுழைவாயில், சிசிடிவி கேமரா, கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன, இந்த மாத இறுதியில் திறக்க முடிவு

* சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அதிகாரிகள் தகவல்

சென்னை: ரூ.43 கோடி மதிப்பீட்டில் அடையாறு தொல்காப்பியர் பூங்கா மறுசீரமைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கடல்சார் ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெறும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையின் அடையாறு கழிமுகப் பகுதியில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தொல்காப்பியர் பூங்கா என ஒரு சுற்றுச்சூழல் பூங்கா கடந்த 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கோரமண்டல் கடற்கரையின் நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளின் தாவரங்களை மீட்டெடுப்பதற்கான முதன்மைத் திட்டத்தின் அடிப்படையில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. பூங்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு வெப்பமண்டல அடர்ந்த பசுமையான காடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆண்டு முழுவதும் அடர்த்தியான அடர் பச்சை இலைகளைக் கொண்ட மரங்கள் மற்றும் புதர்கள் இந்த அமைந்துள்ளது. 160க்கும் மேற்பட்ட மர இனங்கள், மூலிகைகள் மற்றும் கிழங்கு இனங்கள் போன்ற ஆறு தாவரங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த பூங்காவை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 2007ம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011ம் ஆண்டில் அதைத் திறந்துவைத்தார். மேலும் இந்த பூங்காவானது அறிவியலை மற்றொரு விதமாக மக்களின் மனதில் பதியவைக்கிறது. அடையார் சுற்றுச்சூழல் பூங்கா என்ற மற்றொரு பெயரைக் கொண்டது. அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கு பிறகு குசுற்றுசூழல் பூங்கா என பெயர் மாற்றப்பட்டது.

பின்னர் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நகராட்சி நிர்வாத் துறை அமைச்சர் கே.என்.நேரு இப்பூங்காவை பார்வையிட்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் முறையாக பராமரிக்கப்படவில்லை. எனவே சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். இப்பூங்காவுக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் பூங்காவுக்கு மீண்டும் தொல்காப்பிய பூங்கா என பெயரிடப்பட்டது. அந்தப் பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், ரூ.42.45 கோடியில் தொல்காப்பிய பூங்காவை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பூங்காவின் நடைப்பாதை, பூங்கா முகப்பு சீரமைப்பு, பார்வையாளர்கள் இடம், குழந்தைகள் உரையாடும் இடம், பார்வையிடும் இடம், பார்வையாளர்கள் கோபுரம், கண்காட்சி பகுதி என்று மொத்தம் 23 வரை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் அடுத்த மாதம் 31ம் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அதிகாரிகள் கூறியதாவது: தொல்காப்பியர் பூங்கா, தற்போது சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் கல்வியினை சமுதாயத்திற்கு, குறிப்பாக மாணவர்கள் பெற்றிடும் வகையில் சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

இதுவரை 1446 பள்ளிகளை சேர்ந்த 1,12,826 மாணவர்கள் மற்றும் 6,070 ஆசிரியர்கள் இப்பூங்காவில் நடத்தப்பட்டு வரும் சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் பங்கு பெற்று பயனடைந்ததுடன், நகர்ப்புற ஈரநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவசியத்தினை உணர்ந்துள்ளனர். அதேபோல் இப்பூங்காவினை 32,973 பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்துள்ளனர். தொல்காப்பியர் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இதுவரை 24,528 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

பூங்காவை மறுசீரமைக்கக்கும் பணிகளை சென்னை நதிகள் நீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் மேற்கொள்ள ரூ.42.45 கோடி வழங்கியது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், இணைப்பு பாலம், புதிய கழிப்பறை, சிற்றுண்டியகம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் சுற்றுச்சுவர் பழுதுபார்ப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது. சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைபாதை மேம்பாலம் மற்றும் சிறுபாலம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை கடல்சார் ஒழுங்கு முறை ஆணையத்திடமிருந்து அனுமதி பெறப்பட்டு பணிகள் இம் மாதம் 31ம் தேதிக்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு தொல்காப்பியர் பூங்கா மறுசீரமைப்பு பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: