இளநிலை நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு வருகிற 4ம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் சித்தா போன்ற இளங்கலை மருத்துவம் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 4ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு ஆஃப்லைன் பேனா மற்றும் காகித முறையில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும். தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 7 முதல் மார்ச் 7ம் தேதி வரை திறந்திருந்தது. நீட் தேர்வு முறை கோவிட்-க்கு முந்தைய முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. விருப்ப கேள்விகள் நீக்கப்பட்டுள்ளன. மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 180 ஆக இருக்கும். மொத்த தேர்வு காலமும் குறைக்கப்பட்டுள்ளது.

இப்போது கால அளவு 180 நிமிடங்களாக இருக்கும். நீட் தேர்வு மதிப்பெண் திட்டம் கடந்த ஆண்டைப் போலவே இருக்கும். மொத்தம் 20 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஹால் டிக்கெட் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

The post இளநிலை நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: