* அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் இரவு நேரங்களில் ஊருக்குள் பேருந்துகள் வராமல் பைபாஸ் சாலையில் செல்வதால் இரவு நேர பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டியை மையப்படுத்தி, மஞ்சளாறு அணை கிராமம், கெங்குவார்பட்டி, காமக்காபட்டி, ஜி.கல்லுப்பட்டி, கோட்டார்பட்டி, செங்குளத்துப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, சாத்தாகோவில்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, கதிரப்பன்பட்டி, நாகம்பட்டி, தர்மலிங்கபுரம், நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, வேல்நகர், காமாட்சிபுரம், உள்பட 30க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளியூர்களில் வேலை செய்து வருகின்றனர். காலையில் வேலை நேரத்திற்கு புறப்பட்டு தேவதானப்பட்டி வந்து, அங்கிருந்து, பெரியகுளம், தேனி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். தங்களது நிறுவனங்களில் வேலை முடிந்து மீண்டும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தேவதானப்பட்டி வந்து அங்கிருந்து தங்களது ஊர்களுக்கு செல்கின்றனர். தேவதானப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தேவதானப்பட்டி வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தேவதானப்பட்டி பயணிகள் ஏறி டிக்கெட் கேட்டால் தேவதானப்பட்டி ஊருக்குள் செல்லாது, பைபாஸில் தான் இறங்க வேண்டும் என கூறுகின்றனர்.
இரவு நேரங்களில் ஆண்கள் அப்படி கூறும் பேருந்துகளில் ஏறி, தேவதானப்பட்டி பைபாசில் இறங்கி தேவதானப்பட்டி ஊருக்குள் அரை கிலோ மீட்டர் நடந்து செல்கின்றனர். ஆனால் பெண்கள் அந்த பேருந்தில் ஏறுவதில்லை. அவர்கள் பாதுகாப்பு கருதி எந்த பேருந்து தேவதானப்பட்டி ஊருக்குள் செல்கிறதோ, அந்த பேருந்திற்காக காத்திருந்து பயணம் செய்கின்றனர். இதனால் பெண் பணியாளர்கள் கால விரையமும், மனதளவில் பாதிக்கின்றனர். மேலும் தேவதானப்பட்டி பைபாஸ், வைகை அணை சாலை பிரிவில் பயணிகளை இறக்குகின்றனர். தேவதானப்பட்டியில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர்கள், தினந்தோறும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தேவதானப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சென்னை, பெங்களூரூ ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் செல்கின்றனர்.
இவர்கள் சென்னை மற்றும் பெங்களூரூவில் வேலை செய்து வாரவிடுமுறை, மற்றும் விழாக்களுக்கு சொந்த ஊர்களுக்கு வந்து செல்வோர்களாகும். தேனி, கம்பம், போடி, குமுளி ஆகிய இடங்களில் இருந்து தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் சென்னை மற்றும் பெங்களூரூ செல்கிறது. இதே போல் சென்னை மற்றும் பெங்களூரூவில் இருந்து மீண்டும் இந்த ஊர்களுக்கு பேருந்துகள் வருகிறது. இந்த அனைத்து பேருந்துகளும் தேவதானப்பட்டியை கடந்து செல்ல வேண்டும். தேவதானப்பட்டியில் பெரிய பேருந்து நிலையம் உள்ளது. மேலும் பேருந்து நிலையம் ஊருக்குள் இருப்பதால் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். 100க்கும் மேற்பட்ட பேருந்துகளும் ஒவ்வொரு நேரங்களில் புறப்பட்டு செல்கிறது. இரவு 11 மணி வரையிலும் பேருந்துகள் தேவதானப்பட்டி வழியாக செல்கிறது.
இப்படி செல்லும் பேருந்துகள் தேவதானப்பட்டி பேருந்து நிலையத்தை பயன்படுத்தாமல் பைபாஸ் சாலை வழியாக செல்கிறது. இதில் பைபாசில் வைகை அணை சாலையில் பயணிகளை வரச்சொல்லி ஏற்றுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் இந்த இடத்தில் நிற்பது நிழற்குடை கிடையாது. சென்னை, பெங்களூரூ செல்லும் பயணிகள் இந்த இடத்தில் பெரும் சிரமத்தைச் சந்தித்து பயணம் செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த வைகை அணை பிரிவு என்பது பைபாஸ் சாலையை கடந்து செல்கிறது. பைபாஸ் சாலையில் வாகனங்கள் அதிக வேகத்துடன் செல்லும். இந்நிலையில் பைபாசில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கினால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது இந்த பிரிவில் ஷேர் ஆட்டோக்கள், டூவீலர்கள், நடந்து செல்வோர்கள் பைபாஸ் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டு வருகிறது.
அனைத்து பயணிகள் பேருந்துகளும், அனைத்து நேரங்களிலும் தேவதானப்பட்டி பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து செல்ல வேண்டும். இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பயணம் செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பான பயணம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தேவதானப்பட்டியில் ஊருக்குள் வராமல் பைபாஸில் பறக்கும் பேருந்துகள்: இரவு நேர பயணிகள் அவதி appeared first on Dinakaran.