கடல் மட்டத்தில் இருந்து 900 மீட்டர் (3000 அடி) உயரத்தில் உள்ள இந்த கிராமத்தில், பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வனப்பகுதியிலும், பட்டா நிலத்திலும் சீதாப்பழம் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் வெளிமாவட்ட சந்தைகளுக்கு, மலையூர் சீதாப்பழம் விற்பனைக்கு செல்லப்படுகிறது. இந்த கிராமத்திற்கு அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல சாலை வசதி கிடையாது.
பாறைகளின் இடுக்கிலும், பாறைகளின் மீதும் ஏறி, இறங்கி, ஒற்றையடி பாதையில் மக்கள் சென்று வந்தனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள், சந்தைக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க செல்வோர் கால்நடையாகவே நடந்து சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த 1997ம் ஆண்டு சுதந்திர பொன்விழாவை முன்னிட்டு, மலையூருக்கு மண் சாலை அமைக்கும் பணியில், கிராம மக்கள் 200 பேர் ஈடுபட்டனர்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு நபர் என்ற வீதத்தில் இடைவிடாமல் 90 நாட்கள், மண்சாலை அமைக்கும் பணியில் ஊர் பொதுமக்கள் ஈடுபட்டனர். அக்கம் பக்கம் கிராமத்தினரும் சாலை அமைக்கும் பணிக்கு உதவினர். பின்னர், பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில், இந்த சாலை மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 2001ம் ஆண்டு ரூ.77 லட்சம் மதிப்பில், பிரதமர் கிராம சாலைகள் இணைப்புத் திட்டத்தின் கீழ், 5 கிலோ மீட்டர் தூரம் தார்சாலை அமைக்கப்பட்டது.
இதில் 0.8 கிலோ மீட்டர் தூரம் வனத்துறை நிலத்தில் சாலை அமைவதால், வனத்துறை சாலை பணிக்கு தடை விதித்தது. பல்வேறு போராட்டங்களின் விளைவாக, வனத்துறை தடையை நீக்கி, கடந்த 2011ம் ஆண்டு ரூ.2 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட்டது. மலையூர் மலை அடிவாரத்தில் இருந்து, மேல்பகுதி வரை 6 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டது. மலையூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி, ரேஷன் கடை, துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட வசதிகள் வந்தது. இருந்த போதிலும் பஸ் வசதி இல்லை. மலையூர் கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டும் என்று, கடந்த 12 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு, பஸ் இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், தற்போது வரை பஸ் இயக்கப்படவில்லை. அந்த திட்டம் இப்போது வரை கிடைப்பில் உள்ளது. இதுகுறித்து மலையூர் கிராம மக்கள் கூறுகையில், ‘மலையூர் கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டும். 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல 10 கி.மீ., தூரம் நடந்து சென்று, பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அதிகாலை 5 மணிக்கு எழுந்து தயாரானால் தான், பள்ளிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடிகிறது. மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்கு இரவு ஆகிறது. இடையில் வன விலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதால், எங்கள் பகுதிக்கு அரசு மினிபஸ் இயக்க வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மலையூர் கிராமத்திற்கு அடிவாரத்தில் இருந்து, மேல்பகுதி வரை செல்ல 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் 14 இடங்களில் பஸ் திரும்புவதில் சிறிய இடையூறுகள் இருந்தது. அந்த இடையூறுகள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரிய பஸ்கள் இயக்குவதில் சிரமம் உள்ளது. அதற்கு பதிலாக மினி பஸ் இயக்கப்பட உள்ளது. மினிபஸ் இயக்க பர்மிட் வழங்கப்பட்டுள்ளது. சில காரணங்களால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனால் தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டவுடன், விரைவில் மலையூருக்கு மினி பஸ் இயக்கப்படும்,’ என்றனர்.
The post 20 கொண்டை ஊசி வளைவு கொண்ட மலையூர் கிராமத்திற்கு விரைவில் மினிபஸ் இயக்க நடவடிக்கை : பர்மிட் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.