புழல்: புழல் மத்திய சிறைச்சாலையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கான குடியிருப்பு வளாக நுழைவு வாயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட 3 கட்டிடங்கள், சிறிது காலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, இக்கட்டிடகள் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி சேதமடைந்து, முட்செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இவ்வாறு, சேதமடைந்து புதர்மண்டிய கட்டிடங்களில் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. தற்போது, கோடை காலம் என்பதால் அதிலிருந்து வெளியேறும் விஷப்பூச்சிகளும், பாம்புகளும் அருகிலுள்ள சிறைச்சாலை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் மற்றும் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகளில் செல்வதால், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் சிறை கைதிகளும், பாதுகாப்பு பணியில் இருக்கும் சிறை காவலர்களும், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட சிறைத்துறை உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாடின்றி சேதமடைந்து, புதர்மண்டி காணப்படும் 3 கட்டிடங்களை புதுப்பித்து, அரசு சம்பந்தப்பட்ட துறைகள் செயல்படுத்த முன்வர வேண்டும் எனவும், சிறைச்சாலை குடியிருப்பு செல்லும் நுழைவாயிலில் சிறைக் காவலர்கள், குடியிருப்பு பகுதிக்கு யார்யார் வந்து செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க தங்கி பணியாற்ற இடம் ஒதுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post புழல் சிறைச்சாலை வளாகத்தில் புதர்மண்டிய கட்டிடங்கள்: விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.