* ஈட்டிய விடுப்பு நாளில் 15 நாட்கள் வரை பணப்பயன் பெறலாம்
* கல்வி, பண்டிகை, திருமண முன்பணம் அதிகரிப்பு
சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண், பண்டிகை, கல்வி, திருமண முன்பணம் உயர்வு உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110ன் கீழ் வெளியிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நிர்வாகத்தினுடைய தூண்களாவும், அரசின் கரங்களாவும் விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களும், பல்வேறு துறைகளில் திட்டப் பணிகளும் பாராட்டத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் தமிழ்நாடு பலவகையில் முதலிடத்திலேயும் முன்னோடி மாநிலமாகவும் திகழ்கிறது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரின் உழைப்பும், சீரிய பங்களிப்பும் இதற்கு ஒரு மிக முக்கியமான காரணம். அரசு நடைமுறைப்படுத்தி வருகிற நலத் திட்டங்கள், யாருக்கும் விட்டுப்போகாமல், அனைத்து மக்களையும் சென்றடைய பணியாற்றும் அரசு ஊழியர் ஒவ்வொருவரையும் இந்த தருணத்தில் தமிழ்நாடு அரசின் சார்பிலேயும், தனிப்பட்ட முறையிலேயும் பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறேன். தற்போது, அரசு ஊழியர் நலன் கருதி, அவர்களுக்காக ஒன்பது அறிவிப்புகளை தங்கள் வாயிலாக வெளியிட விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 1.4.2026 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்த 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்தாலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை, இந்த ஆண்டே செயல்படுத்த கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையை பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில், 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அறிவிப்பின்படி, சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பை செயல்படுத்த ஆண்டு ஒன்றுக்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இரண்டாவது அறிவிப்பு
1-1-2025 முதல் 2 விழுக்காடு அகவிலைப்படியை ஒன்றிய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்க அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 1-1-2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வை நடைமுறைப்படுத்த ஆண்டு ஒன்றுக்கு 1252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.
மூன்றாவது அறிவிப்பு
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
நான்காவது அறிவிப்பு
அரசுப் பணியாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பயில்வதில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த அடிப்படையில், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ஒரு லட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த கல்வி முன்பணம் உயர்வால் தங்களின் குழந்தைகள் உயர் கல்வி பயில விரும்பும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
ஐந்தாவது அறிவிப்பு: அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ஆறாவது அறிவிப்பு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால் சுமார் நான்கு லட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.
ஏழாவது அறிவிப்பு: ஓய்வூதியதாரர்கள் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
எட்டாவது அறிவிப்பு: அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்த குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்த குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும்.
ஒன்பதாவது அறிவிப்பு: திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பு 1.7.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பினை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. மகளிர் முன்னேற்றத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் அரசு, அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் மகளிரின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில்,
இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளது. கலைஞரது வழியில் அரசு ஊழியர்களுக்கு அரணாக, அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடரும்-தொடரும்-தொடரும். இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் மற்றும் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன் (விசிக), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலை குமார் (மதிமுக), அப்துல் சமது (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் பேசினர்.
The post அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு; அரசு ஊழியர்களுக்கு 9 புதிய அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.