வாணியம்பாடி : வாணியம்பாடி ரயில் நிலையத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையம் வழியாக சென்னை, பெங்களூரு, கோவை, கன்னியாகுமரி மற்றும் கேரளா மாநிலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் செல்கின்றன.
வாணியம்பாடி மட்டுமல்லாது ஆலங்காயம், திம்மாம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள், மருத்துவம், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சென்று வருவதற்கு ரயில் சேவையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பைக் திருட்டு, வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா போன்றவற்றை கடத்துவதற்கும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களை சட்ட விரோத கும்பல் பயன்படுத்தி வருகிறது.
எனவே, தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பயணிகள் ஆகியோரது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது அவசியமாகிறது.
எனவே, வாணியம்பாடி ரயில் நிலைய நடைமேடை, டிக்கெட் கவுண்டர், பயணிகள் பயன்படுத்தும் ரயில்வே பாலம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இரவு, பகல் என கண்காணிக்கும் வகையில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
இவ்வாறாக பொருத்தும் பட்சத்தில் இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், வெளிமாநில மதுபாட்டில் கடத்துபவர்கள் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு ரயில் மூலம் தப்பி செல்பவர்கள், வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துபவர்கள், அதேபோல் ரயில்வே தண்டவாள பகுதியை கடக்கும்போது ரயிலில் சிக்கி உயிரிழப்பவர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு ரயில் நிலையம் மட்டுமின்றி அதன் சுற்றுப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் நவீன சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வாணியம்பாடி ரயில் நிலையத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தம் appeared first on Dinakaran.