553 கி.மீ. நீள எல்லையில் போர் பதற்றம்; பாதுகாப்பு படை தீவிர ரோந்து; 2 நாட்களில் பயிரை அறுவடை செய்து வயலை காலி செய்ய: எல்லைக் கிராம விவசாயிகளுக்கு பிஎஸ்எப் உத்தரவு

அமிர்தசரஸ்: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தால் 2 நாட்களில் பயிரை அறுவடை செய்து வயலை காலி செய்யுங்கள் என்று எல்லைக் கிராம விவசாயிகளுக்கு பிஎஸ்எப் உத்தரவு விட்டுள்ளதால் பயிர் அறுவடை தீவிரமாக நடக்கிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சாப் மாநிலத்தின் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பஞ்சாபின் அமிர்தசரஸ், பிரோஸ்பூர், குருதாஸ்பூர், பதான்கோட் மாவட்டங்கள் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ளன. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எல்லைப் பாதுகாப்பு படையின் பஞ்சாபின் எல்லை விவசாயிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘எல்லைக் கம்பி வேலிக்கு அப்பால் பயிரிடப்பட்ட கோதுமைப் பயிரை இரண்டு நாட்களுக்குள் அறுவடை செய்து, வயலை காலி செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் பயிரை அறுவடை செய்யப்படாவிட்டால், எல்லைக் கதவுகள் முழுமையாக மூடப்படும். எனவே, விவசாயிகள் 48 மணி நேரத்திற்குள் தங்கள் பயிரை அறுவடை செய்து பாதுகாக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்புகள் குருத்துவாராக்கள் மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எப்பின் இந்த உத்தரவை அடுத்து, விவசாயிகள் தற்போது பயிர் அறுவடை வேலையைத் தொடங்கியுள்ளனர். விவசாயிகள் ‘கம்பைன்’ இயந்திரங்களைப் பயன்படுத்தி விரைவாக அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனர்.

பஞ்சாபின் பதான்கோட் முதல் பாசில்கா வரை 553 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையில் ராணுவ நடவடிக்கைகள் திடீரென அதிகரித்துள்ளன. பிஎஸ்எப் வீரர்கள் எல்லையை ஒட்டிய கிராமங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், கிராம மக்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் பற்றிய தகவல் கிடைத்தால், உடனடியாக காவல்துறை மற்றும் பிஎஸ்எப் வீரர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் முழுமையாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரோஸ்பூரின் காலு வாலா கிராமமானது, மூன்று பக்கங்களிலும் சட்லெஜ் ஆற்றால் சூழப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பாகிஸ்தான் உள்ளது. இந்திய-பாகிஸ்தான் பதற்றத்திற்குப் பிறகு, இந்த கிராமம் எப்போதும் முதலில் காலி செய்யப்படுகிறது. எல்லையில் கம்பி வேலிக்கு அப்பால் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக பயிரை அறுவடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பஞ்சாபின் எல்லைக் கிராமங்களும் விரைவில் காலி செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் எல்லைக் கிராம மக்களிடையே பதற்றம் நீடிக்கிறது.

The post 553 கி.மீ. நீள எல்லையில் போர் பதற்றம்; பாதுகாப்பு படை தீவிர ரோந்து; 2 நாட்களில் பயிரை அறுவடை செய்து வயலை காலி செய்ய: எல்லைக் கிராம விவசாயிகளுக்கு பிஎஸ்எப் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: