இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்த நிலையில், அந்த முயற்சியும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இந்திய தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் சர்வதேச எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில் நேற்று மாலை போரை நிறுத்த இந்தியா – பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடந்த நீண்ட நேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இருநாடுகளும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் அறிவார்ந்த செயலுக்கு எனது பாராட்டுக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் மத்தியஸ்தம் செய்து அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தம், அடுத்த சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. பாகிஸ்தான் தரப்பில் ஜம்மு – காஷ்மீரில் அடுத்தடுத்து தாக்குதல்கள் அரங்கேறின.
இந்தியா தரப்பில் அதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது. இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக குற்றம்சாட்டினர். இந்த நடவடிக்கைகள், டிரம்பின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு பாகிஸ்தான் தரப்ப அலட்சியம் காட்டியதாகவும், சவால் விடுத்துள்ளதாகவும், டிரம்புக்கு பாகிஸ்தான் நடுவிரல் காட்டியதாகவும் (நடுவிரலை காட்டுதல் என்பது ஒருவிதமான அவமதிப்பு, கோபம், மரியாதையின்மையை வெளிப்படுத்தும் செயலாகக் கருதப்படுகிறது. கையின் நடுவிரலை மட்டும் உயர்த்தி, மற்ற விரல்களை மடக்கி காண்பிக்கும் ஒரு சைகையாகும்; மேற்கத்திய நாடுகளில் இந்த கலாசாரம் பரவலாக அவமரியாதையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது) சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பாகிஸ்தானின் இத்தகைய செயல்கள், டிரம்பின் முயற்சிகளை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த மீறல்களுக்குப் பின்னால் பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் மற்றும் ராணுவத்தின் நேரடி தொடர்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள், உள்நாட்டு அரசியல் அழுத்தங்களையும், பொது மக்களிடையே இந்தியாவுடனான போருக்கு ஆதரவு குறைவாக இருப்பதையும் மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பாகிஸ்தானின் ராணுவ மேலாதிக்கம் மற்றும் பிராந்தியத்தில் தனது செல்வாக்கைத் தக்கவைக்கும் முயற்சிகளில் ஒன்றாக இந்த போர் நிறுத்த மீறல் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை, இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைகளைத் தொடர அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை மீறல்கள், இந்த முயற்சிகளை சவாலுக்கு உள்ளாக்குகின்றன. இந்தியா, இந்த போர் நிறுத்த மீறல்களுக்கு கடுமையாக பதிலளிக்கும் என எச்சரித்துள்ளது. எனவே பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் மேலும் பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
The post போர் நிறுத்த அறிவிப்பு வெளியான பின்னும் மீறல்கள்; டிரம்பிற்கு நடுவிரலை காட்டியதா பாகிஸ்தான்?: சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனம் appeared first on Dinakaran.