இதன் தொடர்ச்சியாக 3வது நாளாக எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளியன்று இரவும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு முழுவதும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூட்டை நடத்தியதாகவும் இதற்கு இந்திய வீரர்களும் பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தியதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே வசிக்கும் கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதுங்கு குழிகளை சுத்தம் செய்வதற்கு தொடங்கி உள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக அரசின் மூலமாக பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நிலத்தடி தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பித்ததில் இருந்து போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் குறைந்திருந்தது.
எனினும் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவமானது எல்லையோர மக்களிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், எல்லைக்கு அப்பால் இருந்து ஷெல் தாக்குதல் அல்லது துப்பாக்கி சூடு நடந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்ய முடிவு செய்துள்ளதாக எல்லையோர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஜம்மு பிராந்தியத்தில் இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
* பதுங்கு குழிகள்
பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசு ஜம்மு, கதுவா மற்றும் சம்பா, சர்வதேச எல்லை மற்றும் பூஞ்ச், ரஜோரி எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் அமைந்துள்ள கிராமங்கள் உள்பட 5 மாவட்டங்களில் 14,460 தனிநபர் மற்றும் சமூக பதுங்கு குழிகளை கட்டுவதற்கு அனுமதித்தது. பின்னர் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக மேலும் 4000த்துக்கும் மேற்பட்ட பதுங்கு குழிகளை அமைக்கவும் அனுமதி கொடுத்தது.
* ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் முஷ்டகாபாத் மச்சில் செடோரி நாலா காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடம் கண்டறியப்பட்டது. அங்கிருந்த 5 ஏகே 47 துப்பாக்கிகள், பிஸ்டல்கள், வெடிமருந்துகள், துப்பாக்கி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தீவிரவாதிகள் தயாராகி வருவதற்கான அறிகுறிகளை கருத்தில் கொண்டு இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் உயிர்களுக்கும், பொது பாதுகாப்புக்கும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
* பஹல்காம் தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்த மோசமான தீவிரவாத தாக்குதல் செயலுக்கு காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியுதவி செய்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை பொறுப்புக்கூற வைத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியது அவசியமாகும். இந்த கொலைகளுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்பட வேண்டும், சர்வதேச சட்டம் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் உள்ள தங்கள் கடமைகளின்படி, அனைத்து நாடுகளும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடன் தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் சீமா ஹைதர். இவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலமாக உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா என்பவர் அறிமுகமாகி இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு சீமா கணவரை பிரிந்து தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளத்தின் வழியாக இந்தியாவிற்குள் வந்து சச்சின் மீனாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று தற்போது ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாடு கடத்தப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் சீமா, தான் இந்தியாவின் மருமகள் தான் என்றும் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு விரும்பவில்லை. பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆகியோர் என்னை இந்தியாவில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணையில் சேருவதற்கு பாகிஸ்தான் முன்வந்துள்ளது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி இருக்கிறார். ஜம்முவின் ரம்பனில் முதல்வர் உமர் அப்துல்லா, ‘‘முதலில் அவர்கள்(பாகிஸ்தான்) பஹல்காமில் ஏதோ நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் அதனை இந்தியா தான் செய்தது என்று கூறினார்கள். அவர்களின் முதலில் நம்மை குற்றம்சாட்டினார்கள். எனவே அவர்கள பற்றி எதுவும் கூறுவது கடினமாகும். பாகிஸ்தான் தலைவர்களின் அறிக்கைகள் குறித்து நான் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்புவதில்லை. இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது” என்றார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானை பல வழிகளிலும் இந்தியா பழிவாங்கும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முசாபராபாத் பிராந்தியத்தில் ஜீலம் ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்தியா தான் எச்சரிக்கை செய்யாமல் தண்ணீரை திறந்து விட்டு, தண்ணீர் யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
The post எல்லையில் 3வது நாளாக துப்பாக்கிச்சூடு காஷ்மீரில் வீடு வீடாக ராணுவம் சோதனை: தீவிரவாதத்திற்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோர் கைது போர் பீதியில் பதுங்கு குழிகளை தயார்படுத்தும் கிராம மக்கள் appeared first on Dinakaran.