இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை குறிவைத்து துல்லிய தாக்குதல்களை நடத்தியது. இந்த நடவடிக்கையானது, அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் முக்கிய இலக்குகளை அடைந்துள்ளது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ராணுவ செலவை உயர்த்துவது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது, பாகிஸ்தானுக்குள்ளேயே நுழைந்து தாக்குவோம் என்ற உளவியல் ரீதியிலான செய்தியை அவர்களுக்கு ராணுவம் அளித்துள்ளது. இந்த தாக்குதல்கள், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அல்லது அணு ஆயுத அச்சுறுத்தலை இனிமேல் தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானால் பயன்படுத்த முடியாது என்ற புதிய நிலைமையை உருவாக்கியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் மற்றொரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு முதலில் பொறுப்பேற்றாலும், பின்னர் அதை மறுத்தது. ஒன்றிய அரசு, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு கொள்கையை கடுமையாக கண்டித்து. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது, வாகா-அட்டாரி எல்லையை மூடியது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாத தாக்குதலின் குற்றவாளிகளை பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை பிடித்து அவர்களுக்கான தண்டனையை கொடுப்போம் என்று உறுதியளித்தார். மேலும் பஹல்காம் தாக்குதல் சம்பவம் நடந்த போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்தார். கடந்த 9ம் தேதி பிரதமர் மோடி பேசிய பின்னர் தான், பாகிஸ்தானின் 26 இடங்களை குறிவைத்து ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை வலுப்படுத்துவதுடன், அணு ஆயுத அச்சுறுத்தலை இனிமேல் எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு கவசமாக பயன்படுத்த முடியாது என்ற செய்தியை பாகிஸ்தானுக்கு தெளிவாக்கியுள்ளது. விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி அளித்த பேட்டியில், பாகிஸ்தானின் சர்கோதா, ஸ்கர்டு, ஜாகோபாபாத் உள்ளிட்ட விமானத் தளங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், தீவிரவாத உள்கட்டமைப்பை மட்டுமே இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினார். இந்தியாவின் இந்த பதிலடி, 2016 உரி மற்றும் 2019 புல்வாமா தாக்குதல்களுக்கு பின்னர் நடந்த பதிலடிகளை விட மிகவும் தீவிரமானது. அதனால், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் புதிய நிலையை எட்டியுள்ளது. மேலும், கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான உடனடி மற்றும் துல்லியமான ராணுவ நடவடிக்கைகள், இந்திய ராணுவத்தின் பலத்தை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
The post இனிமேல் அணு ஆயுத மிரட்டலை விடுக்காத வகையில் அரசியல், ராணுவம், உளவியல் ரீதியாக வீழ்ந்த பாகிஸ்தான்: பிரதமர் அலுவலக வட்டாரம், அரசியல் நிபுணர்கள் கருத்து appeared first on Dinakaran.