புதுடெல்லி: சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட சூழலில் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட விட முடியாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 1960ம் ஆண்டு பாகிஸ்தானுடன் சிந்து நதி தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்தது. தற்போது 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சூழலில் சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சிந்து நதி தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் ஜல்சக்தித்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறுகையில்,’ இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு துளி தண்ணீர் கூட பாயக் கூடாது என்பதற்கான உத்தியை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிரதமர் மோடி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி பிறப்பித்த உத்தரவுகளை திறம்பட செயல்படுத்துவதற்காக அமித்ஷா பல ஆலோசனைகளை வழங்கினார்.
இந்தியாவிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். ஒன்றிய அரசு தனது முடிவுகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா வலுவான செய்தியை அனுப்பியுள்ளது’ என்று கூறினார்.
டிஜிட்டல் தடயங்கள் சிக்கின
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளை அவர்களது டிஜிட்டல் தடயங்கள் உறுதி செய்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் பூஜி, சுலைமான் ஷா, அபு தல்ஹா ஆகிய மூன்று தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 5 முதல் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம். லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தீவிரவாதி சைபுல்லா கசூரி என்ற காலித் இந்தத் தாக்குதலின் மூளையாக செயல்பட்டுள்ளான். இரண்டு தீவிரவாதிகள் பஷ்தோ மொழி பேசி உள்ளனர்.
அதனால் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்யப்படுகிறது. மேலும், ஆதில் மற்றும் ஆசிப் என்ற இரு உள்ளூர் தீவிரவாதிகள். இவர்கள் பிஜ்பெஹாரா மற்றும் த்ரால் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதே சமயம் மற்ற பாக். தீவிரவாதிகளின் டிஜிட்டல் தடயங்கள், பாகிஸ்தானின் முசாபராபாத் மற்றும் கராச்சியில் உள்ள பாதுகாப்பான மறைவிடங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளன.
தீவிரவாதிகளை வேட்டையாட இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,’பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை அடுத்து நாங்கள் இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறோம். அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கு எனது பிரார்த்தனைகளும் ஆழ்ந்த அனுதாபங்களும் தெரிவிக்கிறேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீங்கள் வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு ஆதரவளிப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.
The post சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம்; பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட விட முடியாது: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.