எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்: தெற்கு ரயில்வே கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி கோரிக்கை

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர்  சூட்ட வேண்டுமென தெற்கு ரயில்வே கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி கோரிக்கை விடுத்தார். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்  வைத்த கோரிக்கைகள் வருமாறு: தமிழ்நாட்டை 5 முறை ஆண்ட முன்னாள் முதல்வர்  கலைஞரின் நினைவினை போற்றிடும் வகையில் மத்திய சென்னை தொகுதியில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். ரயில் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

கடந்த காலங்களில் நடந்த பல நிகழ்ச்சிகளில், குறிப்பாக எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை. எனவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் வரும் காலங்களில் நிகழாமல் தவிர்க்கப்பட வேண்டும். ரயில் நிலையங்களில் பேட்டரி வாகனங்கள்,  சென்ட்ரல், எழும்பூர் மற்றும் அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு போதுமான அளவு பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் வழங்கப்பட வேண்டும்.

பார்க்கிங் வசதிகளை மேம்படுத்தவும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தவிர மற்ற எல்லா ரயில் நிலையங்களிலும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் இல்லை. எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அடுக்கு மாடி வசதி கொண்ட பல்நோக்கு கார் பார்க்கிங் அமைக்க வேண்டும். ரயில்களின் வருகையைக் குறிக்கும் வகையில் ரயில் நிலைய நடைமேடைகளில் கவுன்ட் டவுன் டைமர்களுடன் கூடிய போதுமான டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருத்த வேண்டும்.

பறக்கும் ரயில் நிலையங்களில் தூய்மை பராமரிப்பு, போதுமான வெளிச்சம், மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் இவை அனைத்தும் அங்கு சமூக விரோத செயல்களை தடுக்க வழிவகுக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் வழங்குதல் தெற்கு ரயில்வேயில் நிலுவையில் உள்ள மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை திரும்பப் பெறுவதற்கு பல மாதங்கள் ஆனது. அதுவும் ஓரளவு மட்டுமே கிடைத்துள்ளது. வட்டித் தொகை இன்னும் திரும்ப வரவில்லை. இதனையும் கவனத்தில் கொண்டு விரைந்து வழங்க வேண்டும்.

* சுலையா..சுபாஷ்.. சுபோஜ்.. க்யா ஹை..?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தென்னிந்திய ரயில்வே பொதுமேலாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட எம்.பிக்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு திமுக எம்பிக்கள் டிஆர்பாலு, தயாநிதிமாறன், கிரிராஜன், கனிமொழி சோமு ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது லிப்ட் அருகே தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. அதில், சுலையா, சுபாஷ், சுபோஜ் என்று எழுதப்பட்டிருந்தது. இது இந்தி வார்த்தை. அதையே அப்படியே ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதியுள்ளனர்.

இந்தி வார்த்தையான சுலையா என்றால் ஆர்ட் கேலரி இருக்கும் அறை என்று பொருள். சுபோஜ் என்றால் சாப்பாட்டு அறை என்று பொருள். இந்தி வார்த்தையின் பொருள் உணர்ந்து, அதை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருக்க வேண்டும். ஆனால் மொழிபெயர்ப்பு செய்தவர், இந்தி வார்த்தையை அப்படியே ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதிவிட்டார். அதிகாரிகளும் என்ன என்று இதுவரை கேட்காமல் இருந்துள்ளனர். தற்போது, எந்த அர்த்தமும் தெரியாமல், இப்படி வைத்திருப்பதற்கு காரணம் என்ன என்று எம்பிக்கள் அதிகாரிகளிடம் புகார்களை தெரிவித்துள்ளனர். இப்படி அர்த்தமே தெரியாமல் இந்தியை திணித்தால் எப்படி என்றும் அவர்கள் கேள்வி கேட்கின்றனர்.

The post எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்: தெற்கு ரயில்வே கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: