இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எம்எல்ஏக்கள் பிரின்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), வேல்முருகன் (தவாக) ஆகியோரும் பேசினர். தமிழகம் முழுவதும் கழிவுகளை கையாள்வதற்காக தனித்துறையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் அரசுக்கு வைத்தனர். அவர்களுக்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேசியதாவது:
குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் அந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உறையூர் பகுதியில் 286 சுகாதாரப் பணியாளர்கள் கொண்ட குழு உடனடியாக அமைக்கப்பட்டு, 1,492 வீடுகளில் வசிக்கும் 6,416 மக்களுக்கு தொற்றுநோய் மற்றும் நோய் கண்டறிதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 53 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். வார்டு எண் 8 மற்றும் 10ல் 9 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மூலம் 28 பேர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றனர். அதில் 5 பேர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் 11 ஆயிரத்து 875 பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்துகள், ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார துறையின் மூலம் 6 இடங்களில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தொற்றுநோய் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குழந்தை பிரியங்கா இறந்த பிறகு அவரது உடல் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முதல் பரிசோதனைப்படி, அவர் வயிற்றுப்போக்கு காரணமாக இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பத்திரிகையில் வெளிவந்த 3 பேர் மரணம் என்ற செய்தி முற்றிலும் தவறானது. தற்போது அந்த பகுதியில் மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நீர் ஆய்வு செய்யப்பட்டு, அது குடிக்கத் தகுதியான நீர்தான் என்று தகவல் வந்த பிறகுதான் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
அந்த பகுதியில் நோய் பரவுதல் தடுக்கப்பட்டு, முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. சுகாதாரத்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அருகே இருக்கக்கூடிய கோயில் திருவிழாக்களில் குளிர்பானம் வழங்கப்பட்டு உள்ளது. நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கியதால்தான் அப்பகுதியில் நோய் ஏற்பட்டு இருக்கிறது. குளிர்பானம் வழங்கியது யார் என்பதை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய்கள் மூலம் அனுப்பப்பட்ட நீரினால் இந்த மரணம் நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்பானத்தின் மாதிரி சேகரிக்கப்பட்டு, யார் அதை வழங்கினார்கள் என்பது கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறோம். குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக கூறும் சம்பவம் அந்த பகுதியில் நடக்கவில்லை. அதற்கு டாக்டரின் சான்றிதழும் உள்ளது. அந்த பகுதி எனது தொகுதிக்கு உட்பட்டது. தற்போதுதான் ரூ.40 கோடி செலவில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. எனவே குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் இந்த மரணம் ஏற்படவில்லை.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கூடலூர் பொன் ஜெயசீலன் (அதிமுக) பேசுகையில், ‘‘கூடலூர் தொகுதியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் தகவல் தொழில்நுப்ட பூங்கா அமைக்க வேண்டும்’’ என்றார்.
அதற்கு பதிலளித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருப்பது போல அல்லாமல் தொழில் பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே தகவல் தொழில்நுப்டத்துறை வசம் இருக்கிறது. டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவைகள் தொழில்துறை வசம் இருக்கும். அசாதாரண நிலையே தொடர்கின்றது. மேலும் நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதை கேட்டால் அது கிடைக்கும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ‘‘துறைசார்ந்த பிரச்னைகளை முதலமைச்சரிடம் பேசி தீர்வு காண வேண்டும். உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ‘அமைச்சர் பாசிட்டிவான பதிலை வழங்க வேண்டும்” என்றார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பெரம்பலூர் எம்.பிரபாகரன் (திமுக) பேசுகையில், ‘‘பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில், திருவாலந்துறை தேளீஸ்வரர் கோயில், காரியானூர் ஆதி தான்தோன்றீஸ்வரர் கோயில் ஆகிய மூன்று கோயில்களுக்கும் நீண்ட காலமாக திருப்பணி செய்யாமல் குடமுழுக்கு செய்யாமல் இருக்கிறது. குடமுழுக்கு செய்யப்படுமா?” என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்கள் என 714 கோயில்கள் வகைப்படுத்தப்பட்டு அதில் 274 கோயில்களுக்கு முதல்வர் ஆண்டிற்கு ரூ.100 கோடி வீதம் மூன்றாண்டுகளுக்கு ரூ.300 கோடியும், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.125 கோடியும் அரசின் சார்பில் மானியமாக வழங்கி இருக்கின்றார்.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியத்தொகை மட்டும் ரூ.425 கோடியாகும். 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் மன்னர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் என்று இன்றைய மாமன்னர் முதல்வர் சுமார் ரூ.425 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார். இதுவரையில் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 52 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவுற்றுள்ளது. இதில் ஒரு கோயிலான யுனெஸ்கோ விருது பெற்ற துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு நேற்றைய தினம் நானும், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனும் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தோம். இப்படி வரலாற்றில் சிறப்பாக பதிவிடக்கூடிய அளவிற்கு 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உறுப்பினர் கோரிய ேகாயில்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும். அந்த கோயில்களுக்கு திருப்பணிகளை மேற்கொண்டு விரைவாக குடமுழுக்கு நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
The post திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் நடக்கவில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு appeared first on Dinakaran.