அமிர்தசரஸ்: ஜலந்தரில் இருக்கும் பாஜக மாஜி அமைச்சர் வீட்டின் அருகே இன்று அதிகாலை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளியே நள்ளிரவு 1 மணியளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறை உயரதிகாரிகள், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பிருக்கும் என்று சந்தேகிக்கப்படுவதால், பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியாவுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தகவலறிந்த ஒன்றிய ரயில்வே துறை இணை அமைச்சர் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, ஜலந்தரில் இருக்கும் மனோரஞ்சன் காலியாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு குண்டு வெடிப்பு நடந்த இடங்களை பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘இன்று அதிகாலையில் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே கையெறி வெடிகுண்டுத் தாக்குதல் நடந்துள்ளது.
பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை (பாஜகவை) குறிவைத்துத் தாக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இந்தக் கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் வகையில், இவ்வழக்கை சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.
The post பாஜக மாஜி அமைச்சர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு: பஞ்சாப்பில் அதிகாலை பயங்கரம் appeared first on Dinakaran.