* ரயில்வே கேட் திறக்க முடியாமல் திணறல்
* தேர்வு எழுத சென்ற மாணவர்கள் தவிப்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ரயில்வே சிக்னல் பழுதானதால் சுமார் 40 நிமிடங்கள் ரயில் நடுவழியில் நின்றது. அதனால், ரயில் பயணிகளும், ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும் தவித்தனர்.
திருவண்ணாமலை வழியாக காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் தினசரி பாஞ்சர் ரயில் நேற்று காலை 8.45 மணியளவில் வழக்கம் போல திருவண்ணாமலை வந்துகொண்டிருந்தது.
அப்போது, ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிமீ தூரத்தில் சிக்னல் பழுதானதால் நடுவழியில் ரயில் நின்றது. அதனால், திருவண்ணாமலை – அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சிக்னல் பழுது சீரமைக்கப்படும் என பயணிகள் காத்திருந்தனர். ஆனால், ரயில் நிலையத்தில் இருந்து பழுது சரிபார்க்கும் ஊழியர்கள் தாமதமாக வந்தனர்.
மேலும், சிக்னல் சீரானாதால்தான் ரயில்வே கேட் திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், சிக்னலை சீரமைப்பதில் தொடர்ந்து தாதமம் ஏற்பட்டது. எனவே, ரயிலில் பயணம் செய்த பயணிகளும், ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் நீண்ட தூரம் வரிசையாக காத்திருந்த பொதுமக்களும் பெரிதும் அவதிபட்டனர்.
குறிப்பாக, பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்துக்கு செல்லும் நேரம் என்பதால், அவசர அவசரமாக ஆபத்தான சூழ்நிலையில் ரயில்வே கேட்டை கடந்துசெல்லும் நிலை ஏற்பட்டது, மேலும், நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவர்கள், பஸ் மற்றும் ஆட்டோக்களில் இருந்து இறங்கி, ரயில்வே கேட்டை கடந்து பள்ளிக்கு சென்றனர்.
அதனால், அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து, சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு, சிக்னல் சீரமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, விழுப்புரம் நோக்கி பாசஞ்சர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மேலும், தொழில் நுட்ப கோளாறு தொடர்பாக, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
The post திருவண்ணாமலையில் சிக்னல் பழுதானதால் 40 நிமிடம் நடுவழியில் ரயில் நின்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.