தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பரபரப்பு பேட்டி மாநிலங்களவை பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை

சென்னை: கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக தலைமையிலான அணியில் தேமுதிக இடம் பெற்றது. அந்த தேர்தலில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டது. மேலும் ஒரு மாநிலங்களவை தொகுதியை அதிமுக தர சம்மதித்ததாக பிரேமலதா கூறி வந்தார். ராஜ்யசபா தேர்தலுக்கான நாள் வரும்போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறி வந்தார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களவை உறுப்பினர் பற்றி நாங்கள் ஏதும் சொன்னோமா? யார் யாரோ சொல்வதை எல்லாம் எங்களிடம் கேட்க வேண்டாம். நாடாளுமன்றத் தேர்தலின் போது வெளியிட்ட அறிக்கையில் என்ன இருக்கிறதோ அதன்படி தான் நடக்க முடியும்” என்று தெரிவித்தார். இதனால், பிரேமலதா, எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இதனால், வர உள்ள தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? என்பது கேள்வி குறியாகி உள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவை சீட் தருவதாக அ.தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது உண்மை தான் என்றும், நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம் என்றும் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “2024 மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியை விட்டு அ.தி.மு.க. விலகினாலும் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். இப்போது அ.தி.மு.க.வும், பாஜவும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இனி, மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தே.மு.தி.க. அந்த கூட்டணியில் தொடர்வதா.

வேண்டாமா என்பதை எங்களது பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் முடிவு செய்வார். ஜனவரி 9ம் தேதி கடலூரில் தே.மு.தி.க. மாநாடு நடைபெற உள்ளது. அதில், தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் முறைப்படி அறிவிப்பார். தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அ.தி.மு.க. முன்னமே வாக்கு கொடுத்தார்கள். முழுக்க முழுக்க உண்மை இது. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வேன்.

அ.தி.மு.க. அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன் நான் 2009-ம் ஆண்டு கள்ளக்குறிச்சியிலும் 2014-ம் ஆண்டு சேலத்திலும் போட்டியிட்டேன். சேலத்தில் எனக்காக மோடி பிரசாரம் செய்தார். 2019-ம் ஆண்டு மீண்டும் பாஜ கூட்டணியில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டேன். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் யோசிக்கிறேன்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதில் எங்களுக்கும் விருப்பம் உண்டு. உகந்த வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பற்றி கண்டிப்பாகப் பேசுவோம். அதற்கான தகுதியும் எங்கள் கட்சிக்கு உள்ளது” என்று எல்.கே.சுதீஷ் கூறினார். மாநிலங்களவை எம்பி சீட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

The post தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பரபரப்பு பேட்டி மாநிலங்களவை பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை appeared first on Dinakaran.

Related Stories: