*தாய் காயம்
பாலக்காடு : பாலக்காடு அருகே யானை தாக்கி தொழிலாளி பலியானார். அவரது தாய் படுகாயமடைந்தார்.பாலக்காடு மாவட்டம் முண்டூர் அருகே கயரங்கோடு கண்ணாடன்சோலையை சேர்ந்தவர் அலன் ஜோசப் (24). இவர் கொல்லத்திலுள்ள தனியார் ஸ்டேஷனரி கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் முண்டூர் கும்மாட்டி திருவிழாவில் பங்கேற்க கொல்லத்திலிருந்து வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அலன் ஜோசப், அவரது தாய் விஜி ஆகியோர் கயரங்கோட்டிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றனர். கண்ணாடன்சோலை அருகே செல்லும் போது அங்கு வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க இருவரும் அலறியடித்து ஓடினர்.
இருப்பினும், துரத்தி சென்ற காட்டு யானை இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் காட்டு யானையை விரட்டி அடித்தனர். பின்னர் இருவரையும் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அலன் ஜோசப் பரிதாபகரமாக உயிரிழந்தார். முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக விஜியை திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
முழு கடையடைப்பு போராட்டம் : காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. தலைமையில் இடதுசாரி முன்னணி கட்சியினர் முண்டூர் பகுதியில் முழு கடையடைப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இதனால் முண்டூர் பகுதியில் அனைத்து கடைகளும் நேற்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அடைக்கப்பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் வழக்கம் போல இயங்கின.
பால் பூத், மருந்துக்கடைகள் வழக்கம்போல செயல்பட்டன. இந்த போராட்டத்தில், வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நஷ்டஈடு வழங்க வேண்டும். காடுகளில் இருந்து வெளியேறும் வன விலங்குகளை கண்காணித்து விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் காவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். கயரங்கோடு, தோணி, மலம்புழா, கல்லடிக்கோடு பகுதிகளில் வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயிர் சேத நஷ்டஈடு வழங்க வேண்டும். சாலையோரங்களில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் காட்டு யானை மிதித்து தொழிலாளி பலியான சம்பவத்தை கண்டித்து பாலக்காடு மாவட்ட பாஜ சார்பில் வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
The post பாலக்காடு அருகே யானை தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.