குடகு: கர்நாடகாவில் மனைவியை கணவன் கொன்றதாக கூறி வழக்கை போலீசார் முடித்து வைத்த நிலையில், அந்தப் பெண் கள்ளக்காதலனுடன் திரும்பியதால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால்நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவி மல்லிகாவை காணவில்லை என்று கடந்த 2020 டிசம்பரில் போலீசில் புகார் அளித்தார். விசாரணையை தொடங்கிய போலீசார் பெட்டடாரபுரா என்ற இடத்தில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு ஒன்றை கண்டுபிடித்து திரும்பினர். இந்த எலும்புக்கூடு மல்லிகாவுடையது என்றும், சுரேஷ் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியதாகவும் குற்றப்பத்திரிகை தயாரித்து போலீசார் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி அவருக்கு தண்டனையும் பெற்றுக்கொடுத்தனர். ஆனால், இந்த வழக்கில் சாட்சியாக இருந்த சுரேஷின் நண்பர் ஒருவர், கடந்த ஏப்ரல் முதல் தேதியன்று மடிகேரியில் உள்ள ஒரு ஓட்டலில் கொலை ெசய்யப்பட்டதாக கூறப்படும் மல்லிகா, மற்றொரு நபருடன் சேர்ந்து உணவு அருந்துவதை பார்த்தார்.
உடனடியாக மல்லிகாவை மடிகேரி காவல் நிலையத்திற்கு அந்த நண்பர் அழைத்துச் சென்றார். பின்னர் அந்த தகவலை நீதிமன்றத்திற்கும் தெரிவித்தார். மேலும் மல்லிகாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் விசாரித்தபோது, தான் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக மல்லிகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்றபடி தனது முதல் கணவர் சுரேஷுக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டது. மேற்கண்ட வழக்கில் போலீசாரை கடிந்து கொண்ட நீதிமன்றம், வரும் 17ம் தேதிக்குள் முழு விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மேற்கண்ட வழக்கில் மனைவியை காணவில்லை என்று புகார் கூறிய சுரேஷை, ஒரு வருடத்திற்குப் பிறகுதான் போலீசார் கைது செய்தனர்.
மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்தது என்றும், அதை கண்டுபிடித்ததால் தான் மனைவியை கொலை செய்ததாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வழக்கை போலீசார் முடித்து வைத்திருந்தனர். மேலும் சுடுகாட்டில் இருந்து கண்டெடுத்த ஒருவரின் எலும்புக்கூடு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டாலும், அதற்கு முன்பே போலீசார் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். பின்னர் வந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவில் எலும்புக்கூடு மல்லிகாவுடையது இல்லை என்று கண்டறியப்பட்டாலும், போலீசார் அதை பொருட்படுத்தவில்லை. குற்றப்பத்திரிகையில் உள்ள முரண்பாடுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியும், சுரேஷ்தான் குற்றவாளி என்று போலீசார் தரப்பில் உறுதியாக இருந்தனர். தற்போதைய கண்டுபிடிப்புகளின் பின்னணியில் எலும்புக்கூடு யாருடையது? என்பதையும் கண்டுபிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசாரின் தரப்பில் தான் தவறுகள் நடந்துள்ளது.
எதற்காக போலீசார் பொய்யான குற்றப்பத்திரிகையை தயாரித்தார்கள்? என்ற கேள்வி எழுகிறது. சுடுகாட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு யாருடையது? என்ற கேள்வியும் எழுகிறது. நிரபராதியான சுரேஷ், கடந்த ஒன்றரை வருடங்களாக சிறையில் உள்ளார். அவர் கடுமையான மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறினார். மேலும் போலீசுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தை நாட உள்ளதாகவும் கூறினார். மேற்கண்ட விவகாரம் கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நீதிமன்ற விசாரணையில் போலி குற்றப்பத்திரிகை; மனைவியை கொன்றதாக கூறி கணவனுக்கு சிறை தண்டனை பெற்றுத்தந்த கர்நாடக போலீஸ்: ஒன்றரை ஆண்டுக்கு பின் கள்ளக்காதலனுடன் திரும்பியதால் திருப்பம் appeared first on Dinakaran.